இறுதிப் போரில் மனிதப்பேரவலம் நடந்தேறிய முள்ளிவாய்க்கால் இழப்புக்களின் துயர நினைவுகளை அனுஷ்டித்த தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற அச்சுறுத்தல்கள், மிரட்டல்களை ஐ.நா மனித வுரிமை ஆணையாளருக்கும், தூதரகங்களுக்கும் அறிக்கையாக சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம்,
அச்சுறுத்தலுக்குள்ளானோர் தனிப்பட்ட விதத்திலாவது தமக்கு அறிவித்தல் ஒன்றை தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மே 12ஆம் திகதி செம்மணியில் ஆரம்பமாகிய முள்ளிவாய்க்கால் வாரம், மே 15 ஆம் திகதி குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப் பட்ட குமுதினி படுகொலை நினைவு தூபி யிலும், 16 ஆம் திகதி வவுனியாவிலும், கிளிநொச்சிலும், 17ஆம் திகதி மன்னாரிலும்,இறுதி நாளான 18ஆம் திகதி அன்று முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை யில் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நினைவு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்களும் அரசியல்கட்சி பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் ஒட்டுமொத்த தமிழர்களும் துக்க தினமாக அனுஷ்டிக்கும் இந்த நினைவு நாளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனப்படுகொலையை அரங்கேற்றும் போது அதற்கு ஆதரவாக இருந்த இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவில் வறுமை ஒழிப்பு திட் டத்திற்காக வருகை தர திட்டமிட்டிருந்தார். பின்னர் எமது எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டது.
இது தவிர எம்மால் முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்பட்டபோது எமக்கு தொலைபேசி ஊடக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. ஜாதிக ஹெல உறுமய, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், என பலரும் எம்மை அச்சுறுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இவை எல்லாமே அச்சுறுத்தல் கள் தான்.
முள்ளிவாய்க்காலில் நினைவுக் கற்களை செதுக்கி நினைவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த அருட்தந்தை இ.எழில்ராஜன் விசாரணை என்ற பெயரில் இரு தடவைகள் அழைக்கப்பட்டு மனதளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இவ்வாறு வணக்கத்துக்குரிய அருட்தந்தை மற்றும் மக்கள் பிரதிநிதிகளான எம்மையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றனர் என்றால் சாதாரண மக்களின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
மேலும் முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்தார்கள் என்ற காரணத்துக்காக 8 இளைஞர்கள் தென்னிலங்கை நிறுவனம் ஒன்றினால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதெல்லாம் ஒருதிட்டமிட்ட ஒடுக்கு முறைகளாகவே உள்ளன. இந்த அச்சுறுத்தல்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டேயுள்ளன. மகிந்த மைத்திரி அரசாங்கங்கள் இதற்கு விதிவிலக்கு அல்ல என்றார் சிவாஜிலிங்கம்.