சுவிசில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு!

0
556

மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களுக்குமான எழுச்சி நிகழ்வும், மாவீரர்களான நடுகல் நாயகர்களுக்கும், தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 29வது ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளர், மாமனிதர் நினைவுகூரலும் 21.05.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று லுட்சேர்ன் மாநிலத்தில்  அரங்கம் நிறைந்த மக்களுடன் மிகவும் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி  நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் இசைக்கலைஞர்களால் கரோக்கே முறையில் எழுச்சிப் பாடல்களும் வழங்கப்பட்டன.

நூற்றுக்கணக்கான மாநில வாழ் மக்கள் அரங்கம் நிறைந்து  நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்து எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், சிறுவர்களின்; கவிதாஞ்சலி நிகழ்வுடன் காலத்திற்கேற்ப கருப்பொருளை கொண்ட சிறப்புரைகளும் இடம்பெற்றன. இவ் நிகழ்வில் இளம் இசைக்கலைஞர்கள் நாதசுரம் மற்றும் வயலின் வாத்தியக் கருவிகளில் எழுச்சிப்பாடல்களை மீட்டியமை மிகவும் சிறப்பாக அமைந்ததுடன் பார்யைவாளர்களின் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை மக்கள் எல்லோரும் சேர்ந்து பாடி, தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நினைவெழுச்சி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here