கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கமொன்றை அமைப் பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அழைப்பு குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பரிசீலனை மேற்கொள்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக அக்கட்சியின் பிரதிதலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஊடகவிலயாளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இவ் அழைப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கருத்து வௌியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கதை அமைப்பதற்காக இணக்கத்திற்கு வருமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் விடுக்கப்பட்ட அழைப்பை உண்மையிலேயே சிறந்த விடயம். அவ்விடயத்தை அவர்களின் கட்சியானது முதலமைச்சர் பதவியை பெறுவதற்கு முன்னதாக சிந்தித்திருந்தால் மிகச் சிறப்பானதாக இருந்திருக்கும்.
நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களிடம் கிழக்கு மாகாண சபை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். குறிப்பாக 2012ஆம் ஆண்டு தேர்தலில் பின்னர் ஆட்சியமைப்பதற்கு நாம் அழைப்பு விடுத்தோம். ஆனால் அதனை நிராகரித்து விட்டார். அதனைத் தொடர்ந்து மத்தியில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து பெரும்பான்மையைக் கொண்ட நாம் எமது கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சரை நியமிக்கவேண்டும் எனக் கோரினோம். ஆனால் அதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளாது தமக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் எனக் கூறி சத்தியப்பிரமாணமும் செய்து விட்டார்கள்.
அவ்வாறான நிலையிலேயே எமக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. எம்மைப்பொறுத்தவரையில் கிழக்கு மராகாணத்தில் தமிழ் பேசும் இரு சமூகங்கள் காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த அழைப்பையும் நாம் கவனத்தில் கொள்வோம்.
இந்த அழைப்பு குறித்து கிழக்கு மாகாண சபையின் பதினொரு மாகாணசபை உறுப்பினர்கள்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளோம். அதன் பின்னரே எமது இறுதி முடிவை அறிவிக்கவுள்ளோம் என்றார்.