கிழக்கு மாகாண சபையில் சர்வகட்சி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய
கட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றோம். கூட்டமைப்பும் ஐ.தே.க.வும் கிழக்கு மாகாண சபை அமைச்சரவையிலும் பங்கேற்கவேண்டும் என்று அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் ஒன்றித்து பயணிக்கவேண்டும். எங்களுக்கு இடையில் முரண்பாடுகளை களைந்துகொள்ளவேண்டும். அரசியல் ரீதியாக விட்டுக்கொடுப்பு என்ற விட யத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் சில எல்லைகள் இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை முதலமைச்சர் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. அதனால்தான் இந்த முடிவுக்கு வரவேண்டியேற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விவகாரத்தில் கூட்டமைப்பு விடாப்பிடியாக நின்ற
போதுகூட அதனை எஞ்சிய காலத்துக்கு இரண்டாக பகிரும் மாற் றுத் திட்டத்தை நாங்கள் கூறினோம். கூட்டமைப்பு அதனை நிராகரித்துவிட்டு மிகவும் பிடிவாதமாக இருந்தது.
எக்காரணம்கொண்டு கூட்டமைப்பைவிட்டு ஆட்சியமைக்க நாங் கள் விரும்பவில்லை. அதனால்தான் இந்த கோரிக்கையையும் முன்வைத்தோம். ஆனால் கூட்டமைப்பு
ஏற்கவில்லை
என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமைகமான தாருஸலாமில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அகமட் பதவியேற்ற பின்னர் ஏற்பட்ட சர்ச்சை நிலையையடுத்து இந்த செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது. புதிய முதலமைச்சர் நஸீட் அகமட் சர்ச்சைக்குள்ளான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் உளளிட்ட பலர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில்
ஐ.ம.சு.மு. வுடன் உடன்படிக்கை
கிழக்கு மாகாண சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொறிறியலாளர் ஹாபிஸ் நஸீட் அகமட் பதவியேற்றுக்கொண்டுள்ளார். கிழக்கு மாகாண சபையில் மிகுதி இரண்டரை வருடங்களுக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் எங்களுக்கு உடன்படிக்கை உள்ளது. அதற்கேற்பவே இந்த செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதிக்கு நன்றி
உடன்படிக்கையின் பிரகாரம் இதனை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் புதிய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம். இந்நிலையில் மத்திய அரசாங்கத்தில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுள்ளது.
பட்ஜட்டுக்கு ஆதரவு கிடைக்கும்
இடைக்கால வரவு செலவுத்திட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன. அதேபோன்று 10 ஆம் திகதி திருகோணமலையல் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்துககும் அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்கும் என்ற நம்புகின்றோம்.
கிழக்கில் சர்வகட்சி அரசாங்கம்
மேலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் சர்வகட்சி தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உறுதியளித்துள்ளனர். அதன்படி இந்த சர்வகட்சி தேசிய அரசாங்கத்துக்கு முன்மாதிரியாக முன்னுதாரணமாக செயற்படுவதற்கு கிழக்கு மாகாண சபைக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கூட்டமைப்பு ஐ.தே.க.
எம்முடன் இணையவேண்டும்
எனவே அதனை நடைமுறைப்படுத்தவதற்கு யதார்த்தமாக்குவதற்காக கிழக்கு மாகாண சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அதன்படி அமைச்சரவையில் இணைந்துகொண்டு அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வருமாறு தமிழ்க் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
திறந்த அழைப்பு
கிழக்கு மாகாண சபையில் அனைத்து கட்சிகளும் ஆட்சியமைத்து ஒற்றுமையை வெளிப்படுத்துவோம். கிழக்கு மாகாண சபையில் அனைத்து அமைச்சுப் பதவிகளையும் வகிக்கும் எண்ணம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இல்லை. எனவே அமைச்சரவையில் பங்கேற்க வருமாறு கூட்டமைப்புக்கும் ஐககிய தேசிய கட்சிக்கும் அழைப்பு விடுக்கின்றோம். மிகவும் வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் இந்த அழைப்பை விடுக்கின்றோம். எம்முடன் வந்து இணைந்துகொண்டு ஆதரவு தாருங்கள்.
ஜெமீல் விவகாரம் முடிந்தது
இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் முதலமைச்சர் பதவி விவகாரத்தில் முரண்படும் நிலை உருவானது. எனினும் அவர் தனது தவறுக்கு எனனிடம் மன்னிப்பு கோரினார். எனவே அவரின் மன்னிப்பை ஏற்று அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளோம். அவருக்கு எதிராக செய்யப்பட்டிருந்த கட்சி உறுப்புரிமை நீக்கம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை என்பனவற்றை ரத்துச் செய்துள்ளோம். அவர் மீண்டும் புதிய முதலமைச்சரின் கீழ் கட்சியில் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்குவார். இது மகிழ்ச்சியான செய்தியாகவுள்ளது.
கேள்வி கிழக்கில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுகளுக்கு என்ன நடந்தது?
பதில் கிழக்கு மாகாண சபையில் மிகுதி இரண்டரை வருடங்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சர் பதவியில் இருக்கவேண்டும் என்ற உடன்படிக்கை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் எமக்கு இருந்தும் நாங்கள் முதலில் தமிழ் கூட்டமைப்புடனேயே பேச்சு நடத்தினோம். கூட்டமைப்புடன் சேர்ந்து கலந்துரையாடி உடன்பாட்டுக்கு வந்த பின்னரே ஐ.ம.சு.மு. வுடன் பேசலாம் என்று எண்ணினோம்.
திருப்திகரமான முடிவுகள்
எட்டப்படவில்லை.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமப்புக்கும்எங்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திருப்திகரமான முடிவுகள் எட்டப்படவில்லை. எனவே அது சாத்தியமாகவில்லை என்ற மனக்குறை எங்களுக்கு இருந்தது. எனினும் முதலமைச்சர் விவகாரத்தில் ஏற்பட்ட இழுபறி காரணமாக இது நிறைவேறவில்லை. இது வருந்ததக்க விடயம். தற்போது நாங்கள் ஐ.ம. சு..மு.வுடன் இணைந்து கிழக்கில் ஆட்சயமைத்திருந்தாலும் எங்களது ஆரம்ப விருப்பம் கூட்டபை்புடன் இணைந்து ஆட்சியமைப்பதாகவே இருந்தது. இருந்தும் தற்போது கூட சகல கட்சிகளையும் இணைத்த சர்வகட்சி தேசிய அரசாங்கம் அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தில் மாற்றம் இல்லை. கிழக்கு மாகாண சபை அரசாங்கத்தில் வந்து அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம்.
கேள்வி கூட்டமைப்புக்கு அதிக ஆசனங்கள் உள்ளன. எனவே கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்து தேசிய அரசாங்கம் அமைத்திருக்கலாமே?
பதில் கடந்த மாகாண சபைத் தேர்தல் முடிவில் ஐ.ம.சு.மு. மிகுதி இரண்டரை வருடங்களுக்கு முதலமைச்சர் பதவியை எமக்கு தருவதாக இருந்தது. அதனை புறந்தள்ளிவிட்டு நாங்கள் பெருந்தன்மையுடன் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க தயாரானோம். ஆனால் தற்போது துரதிஷ்டவசடமாக சில காட்டமான விமர்சனங்களை அவர்கள் முன்வைத்துள்ளனர். ஏளனமான கதைகள்ங பேசப்பட்டுள்ளன.
முதலமைச்சர் எமக்கு உரித்தானது
அவற்றை நாங்கள் பொருட்படுத்தவில்லை. எனங்களை பொறுத்தவரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெற முழுமையான உரிமையை கொண்டுள்ளது. ஆசன ரீதியாக இந்த விடயத்தில் ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் ஆட்சியமைத்துளளோம். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்கு நிலையை விளக்கியுள்ளோம். கூட்டாக நாங்கள் உருவாக்கிய ஜனாதிபதியின் கொள்கைகளை மாகாண மட்டத்திலும் அமுல்படுத்தவேண்டும் என்ற விருப்பத்துடன் இந்த அழைப்பை விடுக்கின்றோம்.
ஒன்றித்து பயணிக்கவேண்டும்
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் ஒன்றித்து பயணிக்கவேண்டும். எங்களுக்கு இடையில் முரண்பாடுகளை களைந்துகொள்ளவேண்டும். அரசியல் ரீதியாக விட்டுக்கொடுப்பு என்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் சில எல்லைகள் இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை முதலமைச்சர் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. அதனால்தான் இந்த முடிவுக்கு வரவேண்டியேற்பட்டது. ஆனால் கூட்டமைப்பினர் எம்முடன் கலந்துபேசி அரசுடன் இணைந்துகொள்ளலாம். கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பேசுவதற்கும் தயாராக இருக்கின்றோம்.
கேள்வி இதற்கு முன்னரும் கூட்டமைப்புடன் ஆட்சியமைக்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் நிறைவேறவில்லை. இம்முறையும் முடியவில்லை. இது ஏமாற்றம் இல்லையா?
பதில் ஏமாற்றம் என்று எவ்வாறு கூற முடியும்? முதலமைச்சர் பதவியை கூட்டமைபபுக்கு வழங்குவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களிடம் வாக்குகளைகோரவில்லை. அதற்கான ஆணையும் கிடைக்கவில்லை. கூட்டமைப்புககு முதலமைச்சர் பதவியை கொடுக்க நாங்கள் மக்கள் ஆணை கோரவில்லை.
வருத்தத்துக்குரிய விடயம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சர் பெறுவதற்கே எங்களுக்கு மக்கள் ஆணை கிடைத்தது. அந்த ஆணைக்கு மாறாக சென்று அந்த விடயத்தை செய்ய முடியாது. தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். எனினும் சில விட்டுக்கொடுப்புக்களுக்கு நாங்கள் தயாராக இருந்தோம்.
முதலமைச்சர் பதவியை பங்கிட்டுக்கொள்ளவும் நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் அதற்கு அவர் தயாராகவில்லை. அதனை நிராகரித்தார்கள். முழுப் பதவிக்காலமும் தங்களுக்கே வேண்டும் என்று இருந்தனர். அது வருத்தத்துக்குரிய விடயம்.
கேள்வி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் மு.கா. வுடன் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?
பதில் அதனைப் பறறி அவர்களிடம் கேட்கவேணடும். அவசரப்பட்டு அறிக்கை விட விரும்பவில்லை. காலம் வரும்போது விடயங்கள் அம்பலத்துக்குவரும்.
கேள்வி கிழக்கு மாகாண சபையில் தமிழருக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்ற குற்றச் சாட்டு இருந்தது?
பதில் கடந்த மாகாண சபையில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க தயாரானோம். ஆனால் அவர் அதனை விரும்பவில்லை. இம்முறை கூட்டமைப்பினர் புரிந்துணர்வுடனும் விட்டுக்கொடுபபுடனும் எங்களுடன் இணைந்து அமைச்சுப் பதவியை பெற்று கிழக்கு மாகாண த்தில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வரவேண்டும். மிகவும் சினேகபூர்வமாக இந்த அழைப்பை விடுக்கின்றோம். கடந்த காலங்களில் நடந்த விடயங்களை தற்போது பேசி இரண்டு தமிழ் பேசும் சமூகங்களின் பிரதிநிதித்துவங்களைக் கொண்டுள்ள கட்சிகள் தமக்கிடையில் தேவையற்ற பிணக்குகளை கொண்டு செல்வது ஆரோ்கியமாக அமையாது என்பதனை உணர்ந்துள்ளோம்.
கேள்வி எஞ்சியுள்ள இரண்டு வருடங்களுக்கு கூட்டமைப்பும் மு.கா. முதலமைச்சர் பதவியை பகிர்ந்துகொள்ள பேசப்பட்டதா?
பதில் அது தொடர்பாக பேசப்பட்டது. முதலமைச்சர் விவகாரத்தில் கூட்டமைப்பு விடாப்பிடியாக நின்றபோதுகூட இந்த மாற்றுத் திட்டத்தை நாங்கள் கூறினோம். அதனையும் அவர்கள் ஏற்கவில்லை. நிராகரித்துவிட்டு மிகவும் பிடிவாதமாக இருந்தனர். காரணம் எக்காரணம்கொண்டு கூட்டமைப்பைவிட்டு ஆட்சியமைக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் இந்த கோரிக்கையையும் முன்வைத்தோம்.
கேள்வி உறுப்பினர் ஜெமீல் விவகாரம் ?
பதில் சவாலாக இல்லாத எந்த விடயத்தையும் நாங்கள் பொருட்படுத்துவதில்லை. மு.கா. ஏன் இந்த முடிவை எடுத்தது என்பதற்கு சகோதரர் ஜெமீலுக்கு நான் விளக்கம் கொடுத்துள்ளேன்.
கேள்வி ஜனாதிபதி தேர்தலில் மு.கா. மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கியது. எனினும் தவிசாளர் முரண்பட்டு நின்றாரே?
பதில் இந்த விவகாரம் தொடர்பில் நான் தவிசாளரை சந்தித்து நிலைப்பாடுகளை கேட்டிருந்தேன். அவருடைய எதிர்கால அரசியல் தொடர்பாக அவர் சில தீர்மானங்களுக்கு வரவேண்டும். மு.கா. எவருடைய நடவடிக்கையாக இருந்தாலும் அவதானமாக செயற்படும். கட்சிக்கு பாதகமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் எங்கள் கைங்கரியம் தொடரும். கட்சிக்கு எதிராக தீர்மானத்துக்கு எதிராக நடந்துகொள்பவர்கள் அவர்களாக தேடிககொள்கின்ற அனர்த்தங்களாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை மு.கா. வலிய நடவடிக்கை எடுத்துத்தான் எல்லாவற்றையும் திருத்தவேண்டும் என்று இல்லை. தேர்தல் முடிவுகள் மக்கள் தீர்ப்புகள் என்பதும் சில விடயங்களுக்கு தீர்வு கொடுக்கும். இந்த விடயங்கள் குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.
கேள்வி கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்?
பதில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்ற ஜனநாயக உரிமையை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்காது. யாருககும் எல்லாவற்றையும் செய்யும் உரிமை உள்ளது. இது சர்வாதிகாரப் போக்கில் நடக்கும் இயக்கம் அல்ல. யார் ஆர்ப்பாட்டம் செய்தாலும் எடுத்த முடிவுகளை பயந்து மாற்றும் தலைமையும் இல்லை. சாய்ந்த மருதை பொறுத்தவரை துணிவாக நிஜாமுடீன் முன்னாள் மேயர் மீரா சாஹிப் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கேள்வி கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நடத்திய கூட்டத்தில் உங்கள் கட்சியின் ஒருவர் குழப்பியதாக குற்றச்சாட்டு முன்வைக்கபப்பட்டதே?
பதில் குறுஞ்செய்தி ஊடாக குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. பொறுப்புள்ள கட்சி நேரடியாக முறைப்பாடுகளை செய்யவேண்டும். பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யலாம். அதனைவிடுத்து வங்குரோத்து அரசியல் செய்யக் கூடாது. பொலிஸாரின் விசாரணைகைள தடுக்க முற்படமாட்டோம். மு.கா. நேர்மையாக அரசியல் செய்யும் கட்சி. எனவே எஸ்.எம்.எஸ் . குறித்து நான் ஒன்றும் செய்ய முடியாது.
கேள்வி கிழக்கில் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க முடியுமா?
பதில் அதில் எந்த சிக்கலும் இல்லை. நாங்கள் நிரூபிப்போம். ஆனால் கூட்டமைப்புக்கும் ஐ.தே.க.வுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
கேள்வி தவிசாளர் அறிக்கைகளை விடும்போது அவரின் பதவியை கருத்திற்கொண்டு விடுககும்படி கூற முடியாதா?
பதில் இதனை அவரிடம்தான் கேட்கவேண்டும். நானும் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் பாலக்குமார் என்கிற முன்னாள் ஈரோஸ் தலைமையின் கீழ் பணியாற்றிய ஒருவர் என்ற அடிப்படை்யில் அவருக்கு தனிப்பட்ட உணர்வுகள் விருப்பங்கள் இருக்கலாம். அது தொடர்பில் மு.கா. தலைமை எதனையும் கூறவேண்டியதில்லை