யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் பிரான்சு ஆர்ஜெந்தே நகரினை வதிவிடமாகக் கொண்டவரும், ஆர்ஜெந்தே பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் இருந்து 24.11.2014 அன்று மாரடைப்பால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் இழப்பானது எமக்கோர் பேரிடியாகவும், தாங்கொணாத் துயரினையும் தந்துள்ளது.
நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி ஒரு சிறந்த தேசப்பற்றாளர், தேசநல விடுதலை விரும்பி, எதிர்ப்பாளனையும் அன்பால் அரவணைத்துச் செல்லும் பண்பாளன். கடந்த 15 வருடங்களாக ஆர்ஜெந்தே தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் நிர்வாக உறுப்பினராகவும், உப தலைவராகவும் இருந்து பின்னர் கடந்த 9 வருடங்களாக அந்தச் சங்கத்தின் தலைவ[gap]ராக சாவடையும் வரை செயலாற்றியவர்.
தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினராகவும், தமிழர் விளையாட்டுக்கழகம் 95 இன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டவர். காலத்திற்குக் காலம் எமது தாயகம் நோக்கிய விடுதலைச் செயற்பாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராகிய எம்முடன் இணைந்து பல்வேறு வழிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். அவரின் உன்னத செயற்பாட்டிற்கமையவே நாட்டுப்பற்றாளர் என்ற உயரிய மதிப்பளித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி ஒரு மனிதநேயம் கொண்ட பண்பாளர். துன்பப்படும் எமது மக்களுக்கு உதவியவர். எமது எதிர்கால சந்ததியினர் புலம்பெயர் மண்ணில் தம் வாழிட மொழியோடு, அந்நியச் சூழ்நிலையில் தமது மொழி, பண்பாடு, கலாசார, விழுமியங்கள், வரலாறு என்பவற்றை மறந்துவிடாது எமது தமிழ் அடையாளங்கள் அழிந்துபோகாமல் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற பெரும் அவாவினால் தமிழ்ச்சோலைப் பள்ளியை திறம்பட நிர்வகித்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாது, அதனைத் தனது வாழ்நாளில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் வாழ்ந்து காட்டியவர்.
எம் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் உடைத்து அழிக்கப்பட்டபோது கவலை கொண்டு கண்ணீர் விட்டவர்களில் இவரும் ஒருவர். இதற்கு பதில் கவலையும் கண்ணீரும் அல்ல, நாம் வாழும் இடத்தில் அதற்காக நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று அயராது பாடுபட்டு அதற்கான அனுமதியையும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்று மாவீரர் மாதமாகிய நவம்பரில் நிறுவி விளக்கேற்ற முடிவுசெய்து கைகூடி வந்த வேளை எம் தேசப் புனிதர்களின் வாரத்திலேயே அவர் உயிர் பிரிந்ததானது அவரின் மண்பற்றையும், மாவீரர்களில் அவர்கொண்ட உறுதியையுமே எடுத்தியம்பி நிற்கின்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராகிய நாம் எமது தேசப்புதல்வர்களை நினைவு கூரும் நிகழ்வின் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை தன்னையும் இணைத்துக்கொண்டு பணியாற்றியவர் நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்கள்.
இவரின் இழப்பால் கவலையும் கண்ணீரோடும் நிற்கும் நாம் எங்கள் தலைகளைத் தாழ்த்தி வீர வணக்கம் செலுத்துகிறோம். இவரின் இழப்பானது அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமான தமிழினத்திற்குமே. அவர்களின் பிரிவின் துயரில் வாடி நிற்கும் அனைவருடன் நாமும் எமது துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.
“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ’’
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
பிரெஞ்சுக்கிளை