மெரினாவில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற மே 17 இயக்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோருரும் கைது செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. போலீஸ் அனுமதியை மீறி மே 17 இயக்கம் நினைவேந்தல் கூட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது. அனுமதியின்றி மெரினாவில் கூடினால் கைது செய்வோம் என காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தடையை மீறி மே 17 இயக்கத்தினர் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோர் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தூக்கிச்சென்று கைது செய்தனர். இதனிடையே வாகனத்தில் இருந்து இறங்கிய அவர்கள் திருவள்ளுவர் சிலை அருகே மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் அஞ்சல் செலுத்தினர்.பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர. இதனால் மெரினா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.