முள்ளிவாய்க்காலில் நடந்த நினைவேந்தல் நிகழ்வில் தாங்கள் ஆற்றிய உரையினைக் கேட்டோம். காலம் உணர்ந்த உரை அது.
பொதுவில் எதையும் வெளிப்படையாகவும் நீதியாகவும் தாங்கள் எடுத்தியம்புவதால்தான் தங்கள் மீது தமிழ் மக்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளனர்.
உள்நோக்கம் எதுவுமின்றி தமிழ் மக்களின் அவலம் கண்டு தாங்க முடியாத உள்ளத்தினராய் தாங்கள் ஆற்றும் உரைகளும் வெளிப்படுத்தும் கருத்துக்களும் மட்டுமே தமிழ் மக்களை ஆற்றுப்படுத்தி நிற்கின்றது.
யார் எதைச் சொன்னாலும் கொழும்பு அரசியல் தலைமை மீது தமிழ் மக்கள் மிகுந்த வெறுப்புக் கொண்டுள்ளனர். இதைச் சொல்வதில் எமக்கு எந்தத் திருப்தியும் இல்லை.
ஆகையால் உள்ளதைச் சொல்வது ஊடகத்தின் ஒரு தலையாய கடமை என்றுணர்கின்றோம்.
தமிழ் அரசியல் தலைமை மீது நமக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது. ஆனால் அவர்களின் போக்கு தமிழ் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியே நிலைமை போகுமாக இருந்தால் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களைச் சந்திக்க முடியுமா என்ற கேள்வி கூட எழும்.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந் தல் நிகழ்வின் போது அங்கு கூடியிருந்த தாய்மார் தங்கள் காலைப் பிடித்து அழுத காட்சி கண்டோம். இதயம் நெகிழ்ந்து போயிற்று.
ஒருபுறம் எங்கள் அன்னையர்களின் துன்பம். மறுபுறம் தங்கள் மீது எங்கள் தமிழ் மக்கள் கொண்ட நம்பிக்கை.
இந்த நம்பிக்கைக்கூடாக உண்மையையும் நேர்மையையும் விசுவாசத்தையும் எங்கள் மக்கள் எந்தளவு தூரம் மதிக்கின்றனர் என்ற மெய்யுணர்வு.
ஓர் அரசியல் தலைவரின் பெயரைச் சொல்லி அவரை வெளியே போகுமாறு சொல்லுங்கள் என்று அந்தத் தாய்மார் கூறியதன் உள்ளார்ந் தம் சாதாரணமானதன்று.
இலங்கை ஆட்சியாளர்களோடு சேர்ந்து போவதில் எந்தத் தவறும் இல்லை. அரசாங்கத்தோடு சேர்ந்து எங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்ற கேள்வியாகவே அந்தத் தாய்மார்களின் வெறுப்புணர்வை உணர வேண்டும்.
எனவே இந்த இடத்தில் நாம் தங்களுக்குச் சொல்லக்கூடியது தமிழ் மக்கள் உங்களைத் தங்களின் ஆபத்பாந்தவனாகப் பார்க்கின்றனர். உங்கள் வார்த்தைகள் தங்கள் வலிக்கு ஒத்தடம் என்று நம்புகின்றனர்.
எனவே நீங்கள் தமிழ் மக்களின் தனித்துவமான – நம்பிக்கைக்குரிய – அப்பளுக்கற்ற தலைவராக இருக்கிறீர்கள்.
உங்கள் பணி இனிமேல் எவருக்கும் கட்டுப்பட்டதோ மட்டுப்பட்டதோ இல்லை. உங்களை எவராலும் இனிக் கட்டுப்படுத்த முடியாது.
எனவே சில விடயங்களை நீங்கள் முன் னெடுக்க வேண்டும். அரசாங்கத்தோடு; ஜனாதிபதி மைத்திரியோடு; இந்தியாவோடு; உலகநாடுகளோடு தமிழ்த் தலைவனாக நீங்கள் பேச வேண்டும்.
உங்கள் காலைப்பற்றிப் பிடித்து ஐயா! எங்கள் துன்பத்தை தீருங்கள் என்று கேட்கும் எங்கள் தாய்மாரின் அவலத்தை நீக்க வேண்டும்.
இதைச் செய்வது உங்கள் தலையாய கடமை. இதற்காக நீங்கள் எந்த அரசியல் பற்றியும் சிந்திக்க வேண்டியதில்லை என்பதால்,
களத்தில் இறங்கி எங்கள் மக்களின் பிரச்சினைக்கு முடிவு கட்டுங்கள். சர்வதேசத்திடம் முறையிடுங்கள். இதுவே தங்களிடமான எம் கோரிக்கை.
(valampuri)