முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூர்ந்த 8 தமிழ் ஊழியர்களை தென்பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பணி நீக்கம் செய்துள்ளது.
வன்னியில் இடம்பெற்ற கொடிய யுத்ததின் காரணமாக அதில் சிக்குண்டு உயிரிழந்தவர்கள் நினைவாக நேற்று முன்தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் தமிழர் தேசம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பெரும் உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் அன்றையதினம் வவுனியாவில் உள்ள தென்பகுதியைச் சேர்ந்த தனியார் மோட்டார்; கம்பனி ஒன்றில் பணிபுரியும் 8 தமிழ் ஊழியர்கள் தமது பணி நேரம் முடிவடைந்த பின்னர் மாலை 5.30 மணியள வில் நினைவேந்தல் அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
குறித்த எண்மரில் ஒருவரின் தாயாரான புதுக்குடியிருப்பு விசுவமடுவைச் சேர்ந்த சிவலிங்கம் ராஜலக்ஷ்மி என்பவர் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டிருந்தார்.
அவரது நினைவாக தாயாரின் உருவப்படத்தை வைத்து சக ஊழியர்களுமாக மேற்படி 8 பேரும் நினைவேந்தலை அனுஷ்டித்திருந்தமையை அறிந்து கொண்ட தென்பகுதி தனியார் கம்பனியின் மேலிடம் குறித்த எண்மர் தொடர்பிலும் காவல்துறை விசாரணை ஒன்று நடத்திய பின், அவர்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்துள்ளது.இதில் முல்லைத்தீவு, தர்மபுரம், பூநகரி ஆகிய இடங்களைச் சேர்ந்த எண்மரே பணி நீக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளவர்களாவர்.