நேற்று முன்தினம் வியாழக்கிழமை (18.05.2017) காலை 10.45 மணியளவில் வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள ‘எக்சலன்ஸி ‘ என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்து அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இருவர் கட்டட இடிபாடுகளுக்குள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரின் உறவினர்களும் சம்பவ இடத்தில் ஒன்றுதிரண்டு அவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டுத்தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்னும் இரு மணித்தியாலங்களில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தமது உறவினர்களை மீட்டுத்தராவிட்டால் பாரிய பிரச்சினை உருவாகுமென உறவினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள ‘எக்சலன்ஸி ‘ என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தமை தொடர்பில் பலதரப்பினரும் விசாரணையினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ், கட்டட ஆய்வு மையம், பிரதேச செயலகம் ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் சம்பவம் இடம்பெற்றபோது காணாமல்போனதாக கருதப்பட்ட இருவர் உயிருடன் வெளியில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேலை செய்தவர்களின் தகவல்களுக்கு அமைய பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக நம்பும் பொலிஸார், இராணுவம், விமானப்படை, விஷேட அதிரடிப்படை மற்றும் தீயணைப்புப் படை ஆகியவற்றின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.