முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறீலங்கா படைகள் சர்வதேச உதவியுடனும் பங்களிப்புடனும் மேற்கொண்ட இனவெறி தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின் 8ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2017 டென்மார்க் தலைநகரில் எழுச்சியுடன் இடம் பெற்றது.
டென்மார்க் அரசிடம் எமது மக்களிற்கு நீதி வேண்டி பாராளுமன்ற முன்றலில் பேரணியாக ஆரம்பித்து டென்மார்க் நகரசபை முன்றலில் நிறைவடைந்தது. நகரசபை முன்றலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவுத்தூபியில் பொதுச் சுடரேற்றி, மக்கள் மலர் வணக்கம் செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது . அதனைத்தொடர்ந்து எழுச்சி கானங்கள், கவிதைகள், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் பாராள மன்ற உறுப்பினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.
ஈழத்தமிழர்களுக்கு நடந்த இன அழிப்பை அங்கிகரிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி டென்மார்க் வெளிநாட்டு அமைச்சுக்கும், பாராளு மன்றத்திற்கும் மனு கையளிக்கப்பட்டது.
நாம் போராட்டவரலாற்றில் எண்ணற்ற தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் செய்திருக்கின்றோம். சிறிலங்கா படைகளின் கொடுமைகளில் நாம் எமது நிலங்களையும் இலட்சக்கணக்கான உயிர்களையும் இழந்திருக்கிறோம். உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் உணவின்றி, மருத்துவ உதவிகள் இன்றி அவலப்பட்டு மடிந்தார்கள்.
இவ்வளவு அவலங்கள் தியாகங்களின் பின்னால் நாம் சோர்ந்து போகக் கூடாது. எமக்கான நீதியையும் விடுதலையையும் பெறும் வரை ஓய்ந்து போகக் கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து எமது விடுதலைப்பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.