ஐ.எஸ். இலக்குகளின் மீது ஜோர்டான் வான் தாக்குதல்!

0
127

vimanamஐ.எஸ். இலக்குகளின் மீது ஜோர்டான் நாட்டு விமானங்கள் தங்கள் தாக்குதலைத் துவங்கியிருக்கின்றன.

தங்கள் நாட்டு விமானியைக் கொன்றதற்கான பதிலடியின் துவக்கம்தான் இது என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் நஸீர் ஜுதே தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக, ஜோர்டன் சிரியாவிலிருக்கும் ராணுவ இலக்குகளை மட்டுமே குண்டுவீசித் தாக்கிவந்தது. ஆனால், ஈராக்கிலிருக்கும் இலக்குகளும் இனி தாக்கப்படும் என ஜுதே தெரிவித்துள்ளார்.

ஈராக்கிலும் சிரியாவிலும் இருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களையும் ஆயுதக் கிடங்குகளையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமைச்சர் ஜுதே தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டான் நாட்டு விமானி, ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு, உயிருடன் கொளுத்தப்படும் வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து ஜோர்டன் இந்த முடிவை எடுத்துள்ளது.

விமானியின் குடும்பத்தினரைச் சந்தித்தார் மன்னர்

வியாழக்கிழமையன்று தாக்குதல் நடத்திய ஜோர்டான் நாட்டு போர் விமானங்கள், கொல்லப்பட்ட விமானி கஸாஸ்பேயின் கிராமத்திற்கு மேலாகப் பறந்தன.

அப்போது, கொல்லப்பட்ட விமானியின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக ஜோர்டன் நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா அந்த கிராமத்திற்கு வந்திருந்தார்.

விமானியின் சொந்த கிராமமான அயாவில் விமானியின் தந்தை சயிஃப் அல் கஸாஸ்பேவுடன் ஜோடர்ன் நாட்டு மன்னர் அப்துல்லா இருக்கும் காட்சிகள் அந்நாட்டு அரச தொலைக்காட்சிகளில் வியாழக் கிழமையன்று ஒளிபரப்பாயின. ஐஎஸ்ஸுக்கு எதிரான யுத்தத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக அரசர் அப்துல்லா கூறியுள்ளார்.

ஐஎஸ் மீது தாக்குதல் நடத்திவரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் ஜோடர்னும் இடம்பெற்றுள்ளது.

ஜோர்டான் நாட்டு விமானியான கஸாஸ்பே, தனது எஃப் – 16 விமானத்தில் சிரியா மீது பறந்துகொண்டிருந்தபோது, விமானம் விபத்துக்குள்ளானது. தப்பிப் பிழைத்த கஸாஸ்பேயை ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடித்துவைத்தனர்.

விமானி கொல்லப்படும் வீடியோ காட்சியை இந்த வாரம் வெளியிட்டது ஐஎஸ் அமைப்பு. விமானி கொல்லப்பட்டதை உறுதி செய்திருக்கும் ஜோர்டான், அவர் ஜனவரி 3ஆம் தேதியே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறது.

மதகுரு ஒருவர் விடுதலை

இதற்கிடையில் ஜோர்டான் நாட்டுச் சிறையிலிருந்த ஜிஹாதி மதகுருவான அபு முகமது அல் மக்திஸி வியாழக்கிழமையன்று விடுவிக்கப்பட்டார்.

ஜிகாதி கருத்துக்களை இணையத்தில் பதிப்பித்தார் எனக் குற்றம்சாட்டி 2014ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மக்திஸி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவர் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் தெளிவாக இல்லை என்றாலும், விமானி கொல்லப்பட்டதைக் கண்டித்துப் பேசுவார் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமானி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக தங்கள் சிறையில் இருந்த சஜிதா அல்-ரிஷாவி என்ற தற்கொலைப்படை தீவிரவாதியையும் ஒரு அல் – காய்தா நபரையும் புதன் கிழமையன்று தூக்கிலிட்டது ஜோடர்ன்.

விமானியை உயிருடன் விடுவிக்க வேண்டுமானால், பதிலுக்கு ரிஷாவியை விடுவிக்க வேண்டுமென ஐஎஸ் போன வாரம் கூறியிருந்தது.

புதன்கிழமைக்கும் வியாழக்கிழமைக்கும் இடையில், ஈராக்கில் இருக்கும் ஐஎஸ் இலக்குகளின் மீது 9 தாக்குதல்களும் சிரிய இலக்குகளின் மீது மூன்று தாக்குதல்களும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரால் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஐஎஸ்ஸிற்கு எதிரான தாக்குதலில் பங்கேற்றிருக்கும் நான்கு அரபு நாடுகளில் ஜோர்டானும் ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here