சர்ச்சைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மாகாண முன்னாள் அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் நேற்று மாலை கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, அன்வர் ஆகியோர் பங்கேற்றனர். ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆளுநர் முன்னிலையில் மாலை 5.50 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் பெயர் நேற்று முன்தினம் கட்சியின் தலைமைப் பீடத்தினால் பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து அக்கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காக மு.காவின் அரசியல் உயர் பீடம் இன்று மாலை கொழும்பில் கூடவுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஆதரவளிக்க இணங்கியதையடுத்து நேற்று முன்தினம் அக்கட்சியின் பிரதித்தலைவரும் மாகாண அமைச்சராக செயற்பட்டவருமான ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் பெயர் முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனையடுத்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்ததை தொடர்ந்து கட்சியினுள் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையிலேயே ஹாபீஸ் நஸீர் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
ஜெமீல்- ஹபீஸ் போட்டியும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினரும் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட்டுக்கொண்டிருந்த நிலையைில் கொண்டிருந்த நிலையிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் பெயரை பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் எழுந்துள்ளன. அமைச்சர் ரவுப் ஹக்கீம் எடுத்த தீர்மானத்தை கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் ஜெமீல் தவிர்ந்து ஏனையோர் அங்கீகரித்திருந்தனர். நேற்று முன்தினம் முஸ்லிம் காஙகிரஸ் தலைவரின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடனான விசேட கூட்டத்தின் போது இம்முடிவு அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விறிப்பையடுத்து முஸ்லிம்களின் இதயமான அம்பாறை மாவட்டத்தை தலைமைத்துவம் புறக்கணித்து விட்டதாக அதிருப்தியுற்ற மக்கள் நேற்றைய தினம் ஜும்ஆ தொழுகையின் பின்பு மு.கா தலைமைக்கு எதிராக ஆர்ப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது மு.கா தலைமையின் உருவபொம்மையை எரிப்பதற்கு மக்கள் முயன்ற போதும் அதற்கு பொலிஸார் இடமளித்திருக்கவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மு.கா தலைமைக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்ததுடன் அம்பாறை மாவட்டத்தை மு.கா புறக்கணிக்க கூடாது என வலியுறுத்தியிருந்தார்கள்.
ஜெமீல் இடைநிறுத்தம் ஹசன் அலி கருத்து
இதேவேளை இந்த விடயம குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் சுகாதார இராஜங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி கூறுகையில்,
முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப்பீடம் கிழக்கு முதலமைச்சரை தீர்மானித்து விட்டது. இருப்பினும் அது தொடர்பில் சில வாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அவை தொடர்பாக நாம் கவனம் செலுத்தியுள்ளதோடு இன்று மாலை இடம்பெறவுள்ள உயர் பீட கூட்டத்தில் கலந்துரையாடி சுமுகமானதொரு தீர்வை நிச்சயமாக பெற்றுக்கொள்வோம். மேலும் எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரமே நாம் கிழக்கு மாகாண முதலைமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டுள்ளோம் எமக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியின் ஆதரவு காணப்படுகின்றது. இதனால் எம்மால் ஆட்சியை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலை கட்சியின் உறுப்புரிமைகளிலிருந்தும் கடசியில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளார்.
அத்துடன் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியமை மற்றும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியமை ஆகிய காரணங்களுக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் வகித்துவந்த அதிஉயர் பீட உறுப்பினர், இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் உட்பட கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார். அதற்கான உத்தியோக பூர்வ கடிதம் என்னால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெமீல் தவிர்ந்த ஏனைய ஆறு மு.கா உறுப்பினர்களும் கட்சித்தலைமையால் அறிவிக்கப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அஹமட்டை ஏற்றுக்கொள்வதாக சத்தியக் கடதாசி மூலம் உறுதியளித்துள்ளனர் என்றார்.
ஐ.ம.சு. மு ஆதரவு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் உடன்படிக்கையொன்றின் கீழேயே கடந்த 2012 ம் ஆண்டு கிழக்கில் ஆட்சியமைக்கப்பட்டது. இதற்கமைய இறுதி இரண்டரை வருடங்கள் முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இந்த உறுதி முன்னைய ஜனாதிபதி மஹிந்தராஜபகஷவின் அரசினால் நிறைவேற்றப்படுவதில் பின்னடைவு காணப்பட்டது.
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான உடன்படிக்கைக்கு அமைய முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக வியாழக்கிழமை காலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ரவுப் ஹக்கீம் தனது தீர்மானத்தை அறிவித்திருந்தார்.
மேலும் மு.காவின் முதலமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் அதவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்துள்ளதோடு அதன் உறுப்பினர்களான உதுமாலெவ்வை மற்றும் அமீர் ஆகியோர் ஹபீஸ் நஸீர் அஹமட்டை ஆதரிக்கும் பத்திரத்திலும் கைச்சாத்திட்டுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதாக அறிவித்ததையடுத்து கிழக்கு மாகாண சபை ஆட்சி குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில் தேர்தலின் பின்னர் கிழக்கில் யார் ஆட்சியமைப்பது என்ற இழுபறி நிலை நீடித்து வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க தயாரானதுடன் முதலமைச்சர் பதவியை கோரியது. எனினும் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் கோரியது.
இந்நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கிழக்கில் ஆட்சியமைக்கின்றது. எனினும் கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைக்கவேண்டிய தேவை ஆளும் மு.கா. ஐ.ம.சு.மு. கூட்டணிக்கு உள்ளது.
ஹபீஸ் நஸீர் அஹமட்
1994 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்குள் ஹபீஸ் நஸீர் அஹமட் பிரவேசித்தார்.
கெய்ரோ ஜன் சம்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் சவுதி அரேபியா பெற்றோலிய பல்கலைக்கழகத்தில் பயின்று மண் பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஆரம்பகாலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பனவராக கடமையாற்றிருந்தார். அதன் பின்னர் 2005 முதல் 2009வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்ட இவர் மு.கா ஆட்சியின் பங்காளர்காக உருவெடுத்ததைத் தொடர்ந்து விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக ேபியா பெற்றோலிய பல்கலைக்கழகத்தில் பயின்று மண் பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஆரம்பகாலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பனவராக கடமையாற்றிருந்தார். அதன் பின்னர் 2005 முதல் 2009வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்ட இவர் மு.கா ஆட்சியின் பங்காளர்காக உருவெடுத்ததைத் தொடர்ந்து விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார் 45 வயதுடைய ஹபீஸ் நஸீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.