ஒற்றைக் குடைக்குள்ளே தான் தமிழர்களின் வாழ்க்கை;
நச்செழுத்தைத் தவிர்த்து நல்லெழுத்தைக் கொடுப்போம்!
15.05.2017.
ஐபிசி 3வது பத்திரிகையில் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. நிராஜ்டேவிட் அவர்கள் களநிலவரம் என்ற கட்டுரையின் ஊடாக எழுதியிருந்த விடயங்கள் பற்றி ஐபிசி பத்திரிகையின் கருத்துக்களும் அதே பத்திரிகையில் இதழியல்குழு எழுதியிருந்த செய்தியில் இறுதிப்பகுதியில் உள்ள …. வாசிப்பினால் மனிதரைப் பூரணப்படுத்தும் கடமைகளில் பத்திரிகைகள் கவனம் செலுத்த வேண்டும். நச்செழுத்தைத் தவிர்த்து நல்லெழுத்தைக் கொடுப்போம் என்கின்ற ஐபிசி பத்திரிகையின் பதிவைக் கொண்டு இந்த விடயத்தை நாம் முன்வைக்க விரும்புகின்றோம்.
Dily News என்ற பத்திரிகையில் New York’s Day of Terror என்கின்ற தலைப்பிலே வந்த கட்டுரையை வைத்து கொண்டு நிராஜ்டேவிட் எழுதியிருந்த கட்டுரையானது இன்றைய காலச்சூழ்நிலையில் அனைத்துத் தமிழ்மக்களுக்கும் பெரும் மனவுழைச்சலையும், வேதனையையும், ஐபிசி பற்றி இன்னும் சிந்திக வேண்டியதையே இங்குள்ள நிலமை உண்டு பண்ணியிருக்கின்றது.
உயிர் தியாகவேள்வியில் நேர்த்தியுடன் கொண்டு செல்லப்பட்ட எமது விடுதலைப்போராட்டமும் தாயகத்தின் உதயத்தை நோக்கி நகர்ந்ததை பொறுக்க முடியாத சிங்களப்பேரினவாதமும், அதன் அடிவருடிகளும், அதற்கு துணைபோன சில சர்வதேச நாடுகளும் எவ்வாறு சர்வதேசப் பயங்கரவாதப் போராட்டத்துடன் இணைத்து எமது மக்களின் அழிவுக்கும், விடுதலைப் போராட்டத்தின் முடக்கத்திற்கும் வழிசமைத்ததோ அதை மூடி மறைக்கும் வகையிலும், நியாயம் கற்பிக்கும் வகையிலும் அன்று முதல் இன்று வரை தமது எதிர் பரப்புரைகளையும் நடவடிக்கைகளையும் செய்து கொண்டு தான் வருகின்றன செய்து வரத்தான் போகின்றன. ஆனால் உண்மைக்கு புறம்பான அவர்களின் பரப்புரைகளுக்கு பலம் சேர்த்தார்ப்போல் எம்மவர்கள் அதுவும் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்றும் தமிழரின் ஒரே குரலாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொள்ளும் ஐ.பி.சியும் அதன் நிறைவேற்று பணிப்பாளரும் நடந்து கொள்வதும் எழுதிக்கொள்வதும் ஏன்? என்கின்ற கேள்வியை கேட்டு நிற்கின்றது.
தமிழீழத்தில் மட்டுமல்ல உலகத்திலும் கூட சமூக இனவிரோதிகளும், புல்லுருவிகளும் களையப்பட வேண்டும். அவர்கள் மக்கள் முன் கொண்டு வரப்பட்டு இனங்காட்டப்படவும் வேண்டும். இது எல்லோருக்கும் உள்ள மிகப்பெரிய பணியும் கடமையுமாகும். இதனையே இந்தக் கட்டுரையாளர் நேர்மையுடன், துணிவுடன் செய்திருக்க வேண்டுமேயொழிய தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உண்மைக்கு புறம்பாக தெரியாதவர் புரியாதவர்களின் கருத்துக்களுக்கும் கட்டுரைகளுக்கும் பலம் சேர்க்கும் வகையில் தனது கட்டுரை எழுதியிருப்பது எவராலும் ஏற்றுக் கொள்ளவும் கிரகிக்கவும் முடியாதுள்ளதுடன் அவர் இனத்துக்கும் இனவிடுதலைப்போராட்டத்திற்கும் செய்திருக்கும் ஒர் வரலாற்றுத்தவறாகவுமே பார்க்க முடிகின்றது.
தற்போது நிறைவேற்றுப்பணிப்பாளர் என்ற பதவியை பெற்றதும் தமிழர் மனங்களில் தமிழ்த்தேசியத்திற்கு புலத்தில் குரல்கொடுக்கும் மூத்த வானொலியாகவும் தற்பொழுது தொலைக்காட்சியாகவும் இடம் பிடித்திருக்கும் ஐபிசி மக்கள் மனங்களில் நச்சுக்கருத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக புகுத்தலாம் என்று எண்ணுகின்றதா? எண்ணுகின்றாரா? இடம், பொருள்,ஏவல் காலம் என்பதற்கமைய இன்றைய மே மாதம் உயிர் இழந்த எமது அத்தனை சொந்தங்களையும் இழந்து கண்ணீர் சொரிகின்ற காலங்கள். அவர்கள் ஏன் உயிர் ஈந்தார்கள் இழந்தார்கள் என்ற ஒர் காத்திரமான எழுத்தையோ பார்வையையோ பத்திரிகையில் பார்க்க முடியவில்லை.
புலம்பெயர்ந்த மண்ணில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட தமிழர் கட்டமைப்புகள் அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கமையவே நடப்பதுடன் காலத்தின் தேவை கருதி தாயகம் நோக்கிய செயற்பாடுகளையே செய்து வருகின்றமை கட்டுரையாளருக்கு ஒன்றும் தெரியாததல்ல , புரியாததுமல்ல . இன்னொரு இனத்தை அழித்துத்தான் தன் இனத்தை வாழ வைக்க வேண்டும் என்று என்றுமே எமது தேசமோ மக்களோ, விடுதலை போராட்டத்தை நேர்த்தியாக நடாத்திய தமிழீழத் தேசியத் தலைவர் நினைத்துப்பார்த்தது கூட இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முதன்மை ஒழுக்கவிதிகளில் மது, மாது, புகைத்தல், மற்றும் சமூகவிரோதச் செயலுக்கும் இடமேயில்லை என்பதை தமிழ் மக்கள் மட்டுமல்ல சர்வதேசமே நன்கு அறியும். இது சம்பந்தமாகவே சர்வதேச ஊடகங்கள் விட்டிருந்த விடயங்கள் விவரணங்கள் சம்பந்தப்பட்ட கட்டுரையாளர் அறியவில்லைப் போலும் அல்லது வேறு ஸ்தாபனங்களின் மீதான காழ்ப்புணர்ச்சியினால் இதனை இணைத்து இந்த கட்டுரை எழுதப்பட்டவையோ என்று கூட சிந்திக்கத் தோன்றுகின்றது. எனவே இனியும் இவ்வாறான அடுத்தவர்களின் பொய் பரப்புரைகளுக்கு துணைபோகாமல் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் என்று சொல்லும் குற்றம் புரிகின்றவர்களையும், சட்டவிரோதிகளையும் சமூகவிரோதிகளையும் மக்கள் முன் அடையாளம் காட்ட வேண்டியது தமிழர்கள் உழைப்பிலும் வியர்வையிலும் ரத்தத்தில் உருவான அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் இருக்கும் பாரிய பொறுப்பாகும்.
தமிழ்த்தேசியத்திற்கு சார்பானதாக உருவான பல ஸ்தாபனங்கள் பின்னர் தடம்மாறி தமிழ்த்தேசியத்தையும், அதன் போராட்டத்தையும் விமர்சித்துத் தேடுவாரற்றுப் போய்க்கிடப்பதை நாம் நிகழ்காலத்தில் காணுகின்றோம். அப்படியொரு நிலைக்கு ஐபிசி தொலைக்காட்சி போய்விடக்கூடாது என்பதே பிரான்சு வாழ் தமிழீழ மக்களினதும் அனைத்து ஐரோப்பா உலகம் வாழ் தமிழீழ மக்களினதும் கருத்தாக இருக்கின்றதோடு, இக்கட்டுரையின் பின்னர் எம்முடன் தொடர்பு கொண்ட தமிழீழ மக்களின் பேச்சுக்களும் அவர்கள் கூறும் கருத்துக்களும் ஓர்ஆழமான வடுவையும், காயத்தையும் தேவையற்ற இந்தக் கட்டுரை ஏற்படுத்தியிருப்பதையே எமக்கு உணர்த்தி நிற்கின்றது. நல்ல விடயங்களை யார் செய்தாலும் அதைப்பாராட்டவேண்டும் அதேபோலவே தமிழ்த்தேசியத்திற்கும் அதன் ஆன்மாவுக்கு எதிரான கருத்துக்களையும், அபயகீர்த்தியையும் யார் செய்தாலும் அதனை சுட்டிக்காட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் எல்லோருக்கும் உண்டு. கட்புலன் மூலமான ஊடகங்கள் சரியான வழியில் சரியாகக் கொண்டு செல்ல வேண்டும். வெறும் கேளிக்கைகளையும், காலத்திற்கு ஒவ்வாத தேவையற்றவைகளை பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருப்போமானால் போராடும் குணம் மங்கிப்போய்விடும். இந்த கைங்கரியத்தை தெரிந்தோ அன்றித் தெரியாமலோ செய்ய வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினரிடம் உண்மையோடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஒற்றைக் குடைக்குள்ளே தான் தமிழர்களின் வாழ்க்கை. அது யார்?
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ‘
– எரிமலை.