முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் ஊறணி மற்றும் மிருசுவில் படுகொலைகள் நடைபெற்ற இடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த அஞ்சலி நிகழ்வுகளை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்தார்.
2009இல் இறுதிக்கட்ட போரிலும் அதற்கு முன்னரும் சிறீலங்கா இராணுவத்தினராலும் அதனோடு சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுக்களாலும் பல இலட்சம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். இவ் வாறு கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக ஆண்டு தோறும் மே மாதம் 12ஆம் திகதியிலிருந்து மே மாதம் 18ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக பிரகடனப் படுத்தப்பட்டது.
இந்த காலப்பகுதி உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் துக்கதினமாக 2009 இற்கு பின்னர் நினைவு கூர ப்பட்டு வருகின்றது. இந்த காலப்பகுதியில் களியாட்ட நிகழ்வுகளை தமிழ் மக்கள் புறக்கணித்தும் தவிர்த்தும் வருகின்றனர்.
படுகொலைவாரத்தின் முதலாம் நாளான நேற்று முன்தினம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட செம்மணி படுகொலை நடைபெற்ற இடத்தில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்தியிருந்தனர், இரண்டாம் நாளான நேற்றைய தினம் 1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி ஊறணி வைத்தியசாலை மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த பகுதியிலும்,
மற்றும் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மிருசுவிலில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் குழந்தைகள் உட்பட 8 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்த பகுதியிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.
இந்த நினைவு நிகழ்வுகளில் அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் த.தம்பிராஜா, வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் சதீஸ், பருத்தித்துறை பிரதேச சபையின் முன் னாள் உறுப்பினர் பன்னீர்ச்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இன்றைய தினமும் இந்த நினைவு நிகழ்வுகள் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.