சிறீலங்கா அரசால் சர்வதேச ஆதரவுடனும், பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 2009ம் ஆண்டு இனப்படுகொலை வாரத்தின் தொடக்க நாள் நேற்றைய தினம் (12.05.2017) சந்திரிகா அம்மையார் ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டு புதைகுழியில் புதைக்கப்பட்ட செம்மணிப் பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கான நினைவு நாள் மே-18ம் திகதி நினைவேந்தப்படுகிறது. இந்த நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நாளான நேற்றைய தினம் (12.05.2017) காலை 10.30 மணிக்கு செம்மணி படுகொலை இடம்பெற்ற பகுதியில் மக்கள் ஈகை சுடரேற்றி கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கான அஞ்சலிகளை செலுத்தினர். இதில் அரசியல் தலைவர்கள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை இந்த நினைவு நாள் தொடர்ந்து இன்று வடமராட்சி கிழக்கிலும், அடுத்து நெடுந்தீவு குமுதினி படுகொலை இடம்பெற்ற பகுதியிலும் தொடர்ந்து 18ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.