யாழில் காணாமல்போன முதியவர் ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அச்சுவேலி தெற்கு காளி கோயிலடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சண்முகம் சிவகுருநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
சடலமாக மீட்கபட்ட நபர் கடந்த 4ஆம் திகதி வியாழக்கிழமை வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் அச்சுவேலி தொண்டைமானாறு வீதியில் உள்ள மகிழடி வைரவர் கோவிலுக்குப் பின்னால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் அயலவர்கள் காணிக்குள் சென்று பார்த்த போது சடலம் கிடப்பதை அவ தானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதுடன், மல்லாகம் நீதிமன்ற பதில் நீதவான் நன்னியர் தம்பிமுத்து ஸ்தலத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின் பின் சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசார ணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது