தனிமையில் இருந்த பெண்ணொருவரை தாக்கிக் காயப்படுத்திவிட்டு வீட்டினைச் சல்லடை போட்டுத் தேடிய திருடர்கள் அங்கிருந்து பணம், நகை என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக நம்பப்படுகின்றது.
நேற்றுத் திங்கட்கிழமை அதிகாலை கரவெட்டி கலட்டிப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பு.தேவமனோகரி (வயது64) என்ற குடும்பப் பெண்ணே படு காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அதிகாலை வேளையில் குறித்த வீட்டின் ஓட்டைப்பிரித்து உள்நுழைந்த திருடர்கள்
வீட்டில் இருந்த பெண்ணின் தலையில் கொட்டனால் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலில் நிலைகுலைந்து அவர் மயக்கமடையவே அனைத்து கதவுகளையும் திறந்து திருடர்கள் வீட்டினைச் சல்லடைபோட் டுத்தேடியுள்ளனர்.
திருடர்கள் சென்ற பின்னர் மயக்கம் தெளிந்த பிரஸ்தாப பெண் வெளிநாட்டில் உள்ள மகளுக்கு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு தனக்கு நடந்த விபரீதத்தை கூறியுள்ளார்.
இதன்பின்னர் வெளிநாட்டில் இருந்து அவருடைய மகள் இங்குள்ள உறவினர்களுக்கு தகவல் வழங்கியதையடுத்தே அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பெருமளவான பணம், நகை என்பனவற்றை வீட்டிலிருந்து கொள்ளையிட்டு சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்ற போதிலும் உடனடியாக அதன் பெறுமதி தெரியவரவில்லை.
தாக்குதலுக்குள்ளான பெண் வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்பிய பின்னரே அது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து நெல்லியடிப் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக புலன் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.