மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
டுபாயில் பணி புரிந்து விட்டு இலங்கை வந்த கொக்கட்டிச்சோலை 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தாமோதரம் பாஸ்கரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள அரவரது வீட்டுக்கு வந்த புலனாய்வுத்துறையினர் இவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு விட்டு சென்றுள்ளனர். இவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்;
நாட்டுக்கு அனைவரையும் திரும்பி வருமாறு புதிய அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ள நிலையில் வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்ட விடயமானது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்கள் சுதந்திரத்தினை அனுபவிக்க முடியாது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
இலங்கையின் 67 வது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் சந்தேகத்தின் பேரில் தமிழ் இளைஞர்களை கைது செய்யும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவது வேதனைக்குரிய விடயம். சிறுபான்மை சமூகம் நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் வரை சுதந்திர காற்றினை சுவாசிக்க முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.