மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார்!

0
180

மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார். சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த சற்சொரூபவதி அம்மையார் இன்று பிற்பகல் நீர்கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் காலமானதாக அவரது குடும்பத்தவர்கள் அறிவித்துள்ளனர். இறக்கும்போது, அவருக்கு 80 வயது.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் சற்சொரூபவதி நாதன் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்தார். அவர் இந்தியாவின் மெட்றாஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானமானி பட்டதாரியுமாவார்.

இலங்கை வானொலியில் செய்தி வாசிப்பாளராக இணைந்துகொண்ட சற்சொரூபவதி நாதன், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் ஆங்கில சேவையின் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றினார். செய்தி ஆசிரியராக அவர் நீண்டகாலம் பணியாற்றினார். இவர் பிபிசி தமிழோசையில் இலங்கை மடல் நிகழ்ச்சியிலும் பங்களிப்பு செய்து வந்திருந்தார்.

கொழும்பு தமிழ் சங்கத்தின் உப தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்காக பாரிய பணிகளை முன்னெடுத்தவராவார். இந்து கலாசார அமைச்சு 1993ஆம் ஆண்டு அவருக்கு தொடர்பியல் வித்தகர் என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. ஜவஹர்லால் நேரு விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 1995ஆம் ஆண்டில் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான ஜனாதிபதி விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார். இவ்வருடம் இடம்பெற்ற வானொலி அரச விருது வழங்கும் விழாவில் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி சற்சொரூபவதி நாதன் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவரது இறுதி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளதாக அவரது சகோதரர் தயாபரநாதன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here