சுமந்திரன் கொலை முயற்சி – முன்னாள் போராளிகள் பழிவாங்கப்படுகின்றனர்!

0
160

த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுவது முன்னாள் போராளிகளை பழிவாங்குவதற்கான நோக்கம் மட்டுமே என தெரிவித்து சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி யாழ்.மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவித்து முன்னாள் போராளிகள் 5 பேர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி நேற்றைய தினம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி தில்லைநாதன் அர்சுனா மன்றில் ஆஜராகி சந்தேக நபர்கள் ஐந்து பேருக்குமான பிணை விண்ணப்பத்தினை செய்திருந்தார்.
அவர் தனது பிணை மனுவில் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவித்து முன்னாள் போராளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் தொடர்பான வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. 5 சந்தேக நபர்களுக்கு எதிரான மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையிலும் அதன் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு அறிக்கைகளிலும் பல்வேறு சட்டவாக்கங்களுக்கு கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதில் முதலாவதாக அபாயகர ஆயுதங்கள் சட்டத்தின் கீழும் இரண்டாவதாக நஞ்சுகள் அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தின் கீழும் மூன்றாவதாக பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழும், நான்காவதாக பயங்கரவாதிகள் சமவாயரீதியாக நிதி வழங்குதல் தொடர்பான சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுக்குள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.
இதில் பணக் கைமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு பணம் வழங்குதல் போன்ற சட்டங்களுக்கு கீழான குற்றச்சாட்டுக்களுக்கு பிணை வழங்குவதற்கு நீதவான் நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அபாயகர ஆயுதங்கள் சட்டம் மற்றும் நஞ்சுகள் அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தின் கீழ் சாட்டப்பட்ட குற்றங்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு தான் உள்ளது.
அதை தவிர மேல் நீதிமன்றால் விடுதலை செய்ய முடியாத எந்த சட்ட பிரிவின் கீழும் இவர்களுக்கான குற்றச்சாட்டுக்கள் எவையும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட வில்லை. அவ்வாறு இருப்பினும் வழக்கு தொடுநர் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு குற்றச்சாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்கள் என்பது மட்டுமே.
ஆனால் அக் குற்றத்தை சந்தேக நபர்கள் முற்று முழுதாக மறுத்துள்ளார்கள். இந்த வழக்கில் அவர்கள் சந்தேக நபர்கள் ஆக்கப்பட்டதற்கு ஒரே ஒரு காரணம் இவர்கள் முன்னாள் போராளிகள் என்பது மட்டுமே. அதனால் அவர்களை பழிவாங்குவதற்காக தான் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர்கள் திடமாக தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே இப்பிணை விண்ணப்பத்தை நீதிமன்று ஏற்றுக்கொண்டு எதிர் மனுதாரர்களான குற்றத்தடுப்பு பிரிவுக்கும் சட்டமா அதிபருக்கும் அறிவித்தல் இடுமாறு மன்றில் விண்ணப்பித்தார்.
பிணை மனுவை ஏற்றுக்கொண்ட யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த வழக்கினை வழக்கு தொடுநர்தரப்பின் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here