வடக்கு – கிழக்கு இணைப்புடன் சமஷ்டி முறையிலான சுயாட்சி எமக்கு அத்தியாவசியமானது என தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவை வழங்கப்படாது விட்டால் நிரந்தர அரசியல் தீர்வு என்பதற்குள் வர முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னாரில் நேற்றைய தினம் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அரசியல் அமைப்பு திட்டம் நாட்டினுடைய நடைமுறைகளை செயற்படுத்திக் கொண்டிருக்கும் திட்டமாகும்;. அதனுடைய வரைபின் அடிப்படையில் நாட்டின் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மிக முக்கியமானதொன்று.
அதை நாம் மாற்றாமல் பல நடவடிக்கைகளை எடுப்பதற்கு பார்க்கிறோம். அதனால் விளைவு என்னவென்றால், உண்மையான உரித்துக்கள் அரசியல் யாப்பின் கீழ் எமக்கு கிடைக்காமல், ஒரு சில உரித்துக்களை வெறுமையாக தான்தோன்றி தனமாக அரசியல்வாதிகள் எமக்கு தரும் போது அதற்கு உண்மையான சட்ட வலு இல்லாமல் போய்விடும்.
அதற்கு உண்மையான சட்டவலு இருக்க வேண்டும் என்றால் அரசியல் யாப்பு திருத்தம் கட்டாயம் அவசியம். அதனால் தான் அரசியில் யாப்பில் ஒரு சமஸ்டி முறைமை இருக்க வேண்டும் என்றும் வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
அபிப்பிராய வாக்கெடுப்பு தமிழ் மக்களுக்கு சாதகமாகவா பாதகமாகவா அமையும் என்பது அவ் வாக்கெடுப்பு என்ன விதமாக நடக்கும் என்பதில் தான் அமையப்போகிறது. தமிழ் மக்களுக்கு உரித்துக்கள் கொடுக்க வேண்டும் என கூறும் போது சிங்கள மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பது எனது கணிப்பு. ஒரு சில குறைந்த உரிமைகளை கொடுக்கும் போது தமது ஆதரவை கொடுப்பார்கள், ஆனால் பொதுவாக இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து நாம் அறிந்து வந்து நாட்டின் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக்கொள்ள தொடங்கியதே தமிழர்களுக்கு அதை விட்டுக்கொடுக்க கூடாது என்ற ஒரு அடிப்படையில்தான் தொடர்ச்சியாக செய்து கொண்டு வந்துள்ளார்கள்.
ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு எமக்கு அவசியம்; நிச்சயமாக எமக்கு தேவையானது வடக்கு கிழக்கு இணைப்பு என்பது, தமிழர்கள் மட்டும் அங்கே குடிகொள்வது என்று அர்த்தம் இல்லை, அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது கிழக்கு மாகாணத்தில் முன்னர் 5 வீதமானவர்கள் தான் சிங்களவர்களாக இருந்தார்கள் தற்போது 31 வீதம் கூடியுள்ளார்கள். பெரும்பான்மை இனம் சிறிது சிறிதாக எமது பகுதிகளை எடுத்துக்கொள்கிறது.
இது தற்போது வடமாகாணத்திலும் நடக்கிறது. சிங்களவர்கள் மேல் குற்றம் சொல்லவில்லை அவர்களை வரவேண்டாம் என்றும் சொல்லவில்லை ஆனால் எமது உரித்துக்களை தந்த பின்னர் இவற்றை பார்க்கலாம், அது தரப்பட்டால் தான் எமது இடங்களை பரிபாலிக்க முடியும் இல்லையானால் எமது இடங்கள் பறிபோய்விடும்.
வடக்கு கிழக்கு இணைப்போடு சமஷ்டி முறையில் சுயாட்சி எமக்கு தரப்பட வேண்டும்.அது தரப்படாவிட்டால் மீண்டும் பெரும்பான்மை இனத்தின் ஆட்சியில், அதிகாரத்தின் கீழ் நாம் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
எனவே சமஷ்டி, வடக்கு கிழக்கு இணைப்பு இவை இரண்டும் அத்தியாவசியமாக இருக்கிறது அது இல்லை என்றால் நிரந்தர தீர்வு வர முடியாது என வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.