காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிக்க கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் இன்று (திங்கட்கிழமை) கவனயீர்ப்பு மே தின ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
காணமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் தொடர் போராட்டம் இடம்பெற்றுவந்த கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்வலம், டிப்போ சந்திவரை சென்று அங்கு பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
மேற்படி ஊர்வலத்தில், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களின் புகைப்படங்களை கைகளில் சுமந்தவாறும், இழப்பின் வலியை மனதில் சுமந்தவாறும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பிலான தகவல்களை வெளியிடுமாறு வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை கோரியும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப் பட்ட போராட்டம் 70 நாட்களையும் கடந்து இரவு பகலாக தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது