பிரான்சு வெர்செயி தமிழ்ச்சங்க தமிழர் விளையாட்டுவிழா!

0
277

பிரான்சு வெர்செயி தமிழ்ச்சங்கம்; முதற்தடவையாக தமிழர் விளையாட்டு விழாவினை 31.04.2017 ஞாயிற்றுக்கிழமை அவ்வூர் வாழ் தமிழ் மற்றும் பல்லின மக்களுடனும், தமிழ்ச்சோலை மாணவர்களுடன் சேர்ந்து மாநகர விளையாட்டுத்திடலில் நடாத்தியிருந்தது.
மதியம் 12.00 மணிக்கு பொதுச்சுடரினை வெர்சேயில் தமிழ்ச்சோலை நிர்வாகி திரு. யகுலேந்திரன் அவர்கள் ஏற்றி வைக்க பிரெஞ்சுத் தேசியக்கொடியை மாநகரசபையின் அப்பகுதி தலைவர் திரு.டொறொல்த் டொறாய் அவர்களும், தமிழீழத்தேசியக்கொடியினை வெர்சே தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.சகாயநாதன் அவர்களும் ஏற்றி வைக்க , ஈகைச்சுடரினை 12.10.1997ல் முழங்காவிலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் குமுதினியின் சகோதரி ஏற்றி வைத்து மலர் வணக்கமும் செய்திருந்தார். அகவணக்கம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் நடைபெற்றன. பழம் பொறுக்குதல், சாக்கோட்டம், கரண்டியில் பழம் கொண்டு ஓடுதல், போத்தல்களில் நீர்நிரப்புதல், பனிஸ் உண்ணுதல், சாக்கோட்டம், மதிநுட்பத்திற்குரிய குளம் கரை என்ற விளையாட்டும் நடைபெற்றன. இடைவேளையின் போது நடனமாணவிகளின் நடனமும், சிறுவர்களின் தமிழீழ தேசியத்தலைவர் புகழ்பாடும் நடனமும் நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கிளித்தட்டு ( தாச்சிப்போட்டி) நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் குறிப்பாக இளையவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டதை காணக்கூடியதாகவிருந்தது. இன்னும் பல பாரம்பரிய விளையாட்டுக்கள் நிகழ்சி நிரல்களில் இருந்தபோதும் அடைமழை காரணமாக அப்போட்டிகள் ரத்துச் செய்யப்பட்டிருந்தன. காலையிலிருந்து மாலைவரை அப்பிரதேச மக்கள் தமது குழந்தைகளுடன் குடும்பமாக தம்தாய் மொழி பேசி, தமிழ் உணவுகளை உண்டு உற்சாகமாய் முடியும் வரை இருந்திருந்தனர். சாக்கோட்டம், குளம்கரை என்கின்ற விளையாட்டுக்களில் தமிழ் மொழி தெரியாவிட்டாலும் வேற்றுஇன சகோதர குழந்தைகள் பெரியவர்கள் பங்கு பற்றி வெற்றியையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன் சில பிரெஞ்சு பெண்களும் பொட்டு வைத்து எமது உடையான சோலைகளை அணிந்து வந்திருந்தமையும், சேலை அணிய வேண்டிய தமிழீழப் பெண்கள் தாம் வாழும் நாட்டுநாகரீகமான ஜீ ன்ஸ் உடைகளை அணிந்திருந்தமை வெளிநாட்டு மற்றும் பிரெஞ்சு மக்களின் கேள்விக்கும் சற்று சங்கடத்திற்கும் உள்ளாக்கியிருந்தது. இந்த போட்டிகளை நடாத்துவதற்கு இளைவர்களின் பங்குகள் மிகவும் முக்கியமானதாக இருந்தது. எமது தாயக உடுபுடவைகள், உணவுகள், நாம் யார்? எமது இனத்தின் வரலாறு என்ன என்பதை எல்லாம் வியாபார ஸ்தாபனமாகவும், எழுத்துக்கள் நிழற்படங்கள் மூலம் தமிழ்ச்சங்கத்தினர் தெரியப்படுத்தியிருந்தமை பாராட்டுக்குரியதாகும்.
வெர்சே தமிழ்ச்சங்கமும், அப்பிரதேசவாழ் தமிழீழ மக்களும் தம்தாய்மண்ணையும், கலை பண்பாடுகளையும், மறந்து போகாது தமது சந்திக்கும், வேற்று இன மக்களுக்கும் அதனை எடுத்துச் சென்றதின் ஒரு உன்னத வெளிபாட்டை அன்றைய நாளில் காணக்கூடியதாக இருந்ததும். முதற்தடவையாக அவர்கள் மேற்கொண்ட இத்தமிழர் விளையாட்டு விழா அனைத்து தமிழ் மக்களும் எதிர்பார்த்ததற்கு அமைய இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். காலமாற்றத்தினால் ஏற்பட்ட பெருமழையால் சிறந்த பல விளையாட்டுக்கள் நடைபெறாமல் போனது ஏற்மாற்றத்தை எல்லோருக்கும் தந்திருந்த போதும் இவர்களின் முதல் முயற்சிக்கு மக்களின் பங்களிப்பும், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் ஆதரவும், பங்களிப்பும் பெரும் பலமாகவிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர், உறுப்பினர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், மாவீரர் பணிமனை பொறுப்பாளர் தமிழ்ச்சோலை தலைமைப்பணியக உறுப்பினர்கள், தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினர்கள், தமிழீழ மக்களின் தொலைக்காட்சியான ரிரிஎன் தமிழ்ஒளி உறுப்பினர்களும், கலந்து கொண்டு இறுதிவரை நிகழ்வுகளை கண்டுகளித்திருந்தனர். மாலை 19.00 மணிக்கு தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழ்மக்களின் தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்கின்ற கோசத்துடன் தமிழர் விளையாட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here