தலவாக்கலை நகரில் நேற்று பிற்பகல் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியோர் மீது பொலிஸார் குண்டாந்தடி பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகை குண்டு தாக்குதலை மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் ரகசிய தகவல் ஒன்றைத் தொடர்ந்து ஒரு இளைஞனை விசாரணைக்கு உட்படுத்திய போது அவர் ரயில் பாதைவழி ஓட பொலிஸார் விரட்டிச் செல்ல அவர் மேல் கொத்மலை அணைக்கட்டில் பாய்ந்து காணாமல் போயுள்ளார்.
சம்பவத்தில் காணாமல் போன இளைஞன் தலவாகலை கிறேட்வெஸ்டன் கல்கந்த தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனோஜ் ஆவார்.
இவர் போதைவஸ்து கொண்டு செல்கிறார் என சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்திய போதே இளைஞன் நீர்த் தேக்கத்தில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. மேற்படி பதற்றமான சூழ்நிலையினால் நேற்று பி.ப. 3 மணி அளவில் அங்கு வந்த பதுளை கொழும்பு தொடருந்து திரும்பிச் சென்றது.
இது தொடர்பாக தெரிய வருவதாவது தலவாக்கலை நகரத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்த பொலிஸார் சம்பந்தப்பட்ட இளைஞர் (மாரிமுத்து மனோஜ், பாபுள் வெற்றிலையை வைத்திருந்ததாக கூறி பொலிஸார் கைதுசெய்ய முயற்சி செய்தனர்.
இதன்போது தப்பிக்க ஓடிய சம்பந்தப்பட்ட இளைஞனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.
இதனை அவதானித்த நபர் நீர் தேக்கத்தில் பாய்ந்துள்ளதாக தெரியவருகின்றது.
இச் சம்பவத்தினை கண்டித்து 31.01.2015 அன்று மாலை தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியை மறித்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதேசத்தில் பதட்டநிலை காணப்பட்டது.
எனினும் இளைஞனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டபோதிலும் காணாமல் போனவர் குறிப்பிட்ட நேரத்தில் மீட்கப்படவில்லை என கூறி நேற்று காலை 10 மணியளவில் அதிகமான மக்கள் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை நகர மத்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக போக்குவரத்து சேவை பல மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. அத்தோடு, அதன் பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கு பயணித்த தொடருந்தை மறித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இதன்போது, பல மணி நேரம் தொடருந்து சேவை சம்பவ இடத்தில் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் தொடருந்து திரும்பி நானுஓயா வரை சென்றது.
பாதுகாப்பு கருதி பொலிஸாரும் அதிரடி படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.