மேற்கு ஐரோப்பாவுடன் தனது வர்த்தக தொடர்பை உயர்த்தும் நோக்கத்துடன் லண்டன் – சீனா சரக்கு ரயில் ’ஈஸ்ட் விண்ட்’ தனது 12,000 கிமீ பயணத்தை முடித்து கிழக்கு சீன நகரமான யிவூக்கு இன்று (29) வந்து சேர்ந்தது.
உலகின் 2-வது மிக-நீளமான ரயில் தடமாகும் இது. இந்த ரயிலில் விஸ்கி, குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட பொருட்கள் சீனாவுக்கு வந்திறங்கின.
தனது வர்த்தகத்தை உலகின் பல்வேறு திசைகளுக்கும் கொண்டு செல்லும் சீனாவின் மிகப்பெரிய திட்டமாகும் இது. அதே போல் பாகிஸ்தான் – சீனா ‘சில்க் ரோடு’ திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் பல உள்கட்டுமான திட்டங்களுக்கு சீனா திட்டமிட்டு வருகிறது.
இந்த சரக்கு ரயில் ஏப்ரல் 10-ம் தேதி விஸ்கி, குழந்தைகளுக்கான பால், மருந்துப் பொருட்கள், சில இயந்திரங்கள் உள்ளிட்டவையுடன் லண்டனிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா, கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் கடந்து 20 நாட்கள் பயணமாக சனிக்கிழமையன்று சீனாவின் யிவூ நகருக்குள் நுழைந்தது. இந்த நகரம் சிறு நுகர்பொருட்களுக்கான மொத்த விற்பனை மையச் சந்தையாகும்.
ரஷ்யாவின் ட்ரான்ஸ்-சைபீரியன் ரயில்வே தடத்தை விட இந்த தடம் நீளமானது, ஆனால் சீனா-மேட்ரிட் (2014) ரயில் பாதையை விட தூரம் குறைவானது.
சீனா ரயில்வே கார்ப்பரேஷன் மூலமாக இணையும் 15-வது புதிய சரக்கு நகரமானது லண்டன். விமானச் சரக்கு போக்குவரத்தைக் காட்டிலும் இது செலவு குறைவானது, மேலும் கப்பலை விட குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறது.
கப்பலைக் காட்டிலும் 30 நாட்கள் முன்னதாகவே இந்த ரயில் தனது இடத்தை வந்தடைகிறது. சாதாரணமாக 18 நாட்களில் லண்டனிலிருந்து சீனாவுக்கு வருமாறு திட்டமிடப்பட்டது, ஆனால் இந்தச் சோதனை ஓட்டத்தில் 20 நாட்களாகியுள்ளது. இந்த ரயிலில் 88 ஷிப்பிங் கண்டெய்னர்களையே ஏற்றி வர முடியும், ஆனால் கப்பலில் 10,000 முதல் 20,000 கண்டெய்னர்களைக் கொண்டு வர முடியும்.