பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சியா பிரிவு மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 61 பேர் பலியானார்கள். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள ஷிகார்பூரில் சிறுபான்மையினரான ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். அவர்களுக்கான மசூதியில், வெள்ளிக்கிழமையான நேற்று பகல் சிறப்புத் தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தின் மத்தியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
தற்கொலைப் படையை சேர்ந்த மனித வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்ததாக செய்தி வெளியானது. அதே சமயம் ‘ரிமோட்’ மூலம் குண்டை வெடிக்கச் செய்ததாக மற்றொரு தரப்பு தகவல் தெரிவிக்கிறது. குண்டு வெடிப்பில் 61 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். சுமார் 50 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது. குண்டு வெடித்த இடத்தின் மேற்கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது.
இதனால் குண்டு வெடித்ததும், அதன் துகள்கள் கூரையை பிய்த்துக் கொண்டு வெளியே சென்று விழுந்தது. மேற்கூரை பலமான ‘கான்கிரீட்’ ஆக இருந்திருந்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருந்திருக்கும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.