யாழ்.சுன்னாகம் நொதேன் பவர் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு ஒயில் காரணமாக கோண்டாவில் மேற்குப் பகுதியிலுள்ள சில வீடுகளின் கிணறுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இங்குள்ள சில கிணறுகளில் கழிவு ஒயில் காணப்படுவதாக அஞ்சி குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்குப் பிரதேச மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்துப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நிலைமைகளைப் பார்வையிட்ட பின் கிணறுகளில் கழிவு ஒயில் பரவவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்குள்ள சில கிணறுகளில் ஒயில் படலத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் கிராம உத்தியோகத்தருக்கும், பொதுப் பரிசோதகருக்கும் தெரியப்படுத்தியுள்ள பிரதேச மக்கள் நல்லூர் பிரதேச சபையின் கவனத்திற்கும் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆரம்பத்தில் சுன்னாகம் பிரதேசத்தின் சில இடங்களில் மாத்திரம் காணப்பட்ட கழிவு ஒயிலின் தாக்கம் தற்போது வலிகாமம் பகுதியிலுள்ள பல இடங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு உபாதைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் சுன்னாகம் நொதேன் பவர் மின் நிலையத்தால் நிலத்திற்குக் கீழே ஆழ்துளையிட்டுச் செலுத்தப்பட்ட கழிவு ஒயில் யாழ்.நகரப் பகுதியை நோக்கிச் செல்கிறதா? எனச் சூழலியலாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சுன்னாகம் கழிவு ஒயில் விவகாரம் யாழ்.மக்களிடையே ஒரு வித பதற்றத்தையும் தோற்றுவித்துள்ளது.