எங்களுடைய பூர்வீகக்காணிகளுக்குள் செல்லும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை என கடந்த 57 நாட்களாக கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தங்களுடைய சொந்தக்காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் 57வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த 24ம்திகதி கொழும்பில் நடைபெற்ற வடக்கு கிழக்குகாணி பிரச்சனை தொடர்பான கலந்துரையாடலில் முல்லைத்தீவு கேப்பாப்புலவில் பொதுமக்களுக்குச்சொந்தமான 189 ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு நிதி ஒதுக்கீடுகள் கிடைத்தபின் ஆறு வாரங்களின் பின்னர் விடுவிக்கப்படுமென சிறீலங்கா இராணுவ தளபதி தெரிவித்திருந்தார்.
நாங்கள் கடந்த ஐந்து வருடங்களாக எங்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரிவந்த போதும் வாகுறுதிகள் மாத்திரம் வழங்கப்பட்டன காணிகள் எதுவும் விடுவிக் கப்படவில்லை.
இந்நிலையில் எங்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி நாங்கள் இந்தக்கவனயீர்ப்புப்போராட்டத்தை இன்று 57நாளாகவும் முன்னெடுத்து வருகின் றோம். ஏங்களுடைய ஒட்டுமொத்தக்காணிகள் விடுவிக்கப்பட்டு அதற்குள் சென்று குடியேறும் வரை நாங்கள் எங்களுடைய போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்;ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள 617 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கக்கோரி அந்தப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் 9வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.