2011 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் திக தியன்று, சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பில் இருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், கொடிகாமம் காவல்துறை பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார முதல் எதிரியாகக் குறிப்பிடப்பிட்டிருந்தார்.
காவல்துறையைச்சேர்ந்த திசாநாயக்க முதியான்சலாகே சந்தக்க நிசாந்தபிரிய பண்டார, ஞானலிங்கம் மயூரன், பத்திநாதன் தேவதயாளன், ராஜபக்ச முதியான் சலாகே சஞ்சீவ ராஜபக்ச, கோன் கலகே ஜயந்த, வீரசிங்க தொரயலாகே ஹேமச்சந்திர வீரசிங்க, விஜயரட்னம் கோபிகிருஷ்ணன், முனுகொட ஹேவகே விஜேசிங்க ஆகிய எட்டு பொலிஸார் இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டு சித்திரவதைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
இதில் ஒருவர் வெளி நாடு சென்றுள்ளமையால் ஏனைய 7 பேரும் மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பத்திநாதன் தேவதயாளன் என்பவர் பிணையில் செல்வதற்கு யாழ்.மேல் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. இந்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும், யாழ்.மேல் நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்த நிலையில், இரண்டு வழக்குகளிலும் ஒன்றிலிருந்து 7 வரையிலான சாட்சிகள் சாட்சிகளாக உள்ளனர்.
இதில் ஒரு சாட்சியான துரைராசா லோகேஸ்வரன் (வயது 40) என்பவரே இவ்வாறு காவல்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் தனது சட்டத் தரணியான விஸ்வலிங்கம் மணிவண்ணனை பார்ப்பதற்காக சுன்னாகத்தில் சென்று கொண்டிருக்கும் போது, சுன்னாகம் ரொட்டியாலடியில் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த சீருடை அணிந்த இரு காவல்துறை உத்தியோகத்தர்களில் பிரசாத் என்பவர் நீதிமன்றத்தில் என்னுடைய பெயரை சொன்னால் நீ இல்லாமல் போய்விடுவாய் என மிரட்டி சென்றார்.
இது தொடர்பில் எனது சட்டத்தரணிக்கு தெரிவித்ததை அடுத்து சட்டத்தரணி மல்லாகம் நீதிமன்றின் கவனத்திற்கு நேற்றைய தினம் கொண்டு வந்தார்.
குறித்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நீதவான் தெரிவித்ததோடு, அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் நான்கு மணியளவில் காவல்துறை அதிகாரியிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட காவல் அத்தியட்சகர் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
குறித்த சித்திரவதை கொலை வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவராக குறிப்பிட்ட பிரசாத் என்ற சுன்னாகம் காவல்துறை உத்தியோகஸ்தரே தன்னை மிரட்டியுள்ளதாக துரைராசா லோகேஸ்வரன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.