யாழில் டெங்கு நோயின் தாக்கம் உச்சம் பெற்றுள்ளதாக யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைத் தகவல்கள் வாயிலாக அறியக்கிடைத்துள்ளது. டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பல வழகளைக் கையாண்டபோதும் டெங்கு நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தற்போது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைத் தொண்டர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் சகிதம் வீடுவிடாகச் சென்று பாவனையற்ற இடங்கள் மற்றம் பொருட்களில் மழைநீர் தேங்கி நிற்பதை உறுதிப்படுத்தி அதற்குத் தண்டம் வசூலித்து வருகின்றனர்.
மழைநீரின் அளவுக்கேற்ப தண்டப்பணம் மாறுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை யாழ்.குடாவில் உள்ள வீடு ஒன்றிற்குச் காவல்துறையினர் சகிதம் சென்ற தொண்டர்கள் அங்கு வீட்டின் பின்புறம் சிறிய போத்தல் ஒன்றில் மழைநீர் தேங்கி நிற்பதை அவதானித்துவிட்டு, எந்த ஒரு அறிவுறுத்தலுமின்றி அங்கு தனித்துவாழும் மூதாட்டியிடம் தண்டம் வசூலிப்பதற்கு அந்த மூதாட்டியின் அடையாள அட்டையை கேட்டுவாங்கியுள்ளனர். ஆனால், அவரது வயதை காரணம் காட்டி தண்டம் வசூலிக்க முடியாது எனத் தீர்மானித்து, தற்செயலாக அங்குவந்த மூதாட்டியின் பேர்த்தியாரின் அடையாள அட்டையை வாங்கி அவரின் பேருக்கு தண்டப்பணத்தை மாற்றி எழுதியுள்ளனர். குறித்த தண்டப்பணத்தை நேரில் சென்று நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும்.
இவ்வாறான நடைமுறை அனைவரையும் விசனமடைய வைத்துள்ளது. மூதாட்டியை எச்சரிக்கை செய்துவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் குறித்த அதிகாரிகளின் இவ்வாறான நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டியது அவசியம் என அவதானிகள் பலரும் கருத்துவெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, வடமராட்சியில் டெங்கின் தாக்கத்துக்கு உள்ளான 67 பேருக்கு மேற்பட்டோர் இனங்காணப்பட்டுள்ளதாக கர வெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
வடமராட்சி பகுதியில் டெங்கின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும் கொழும்பு சென்று வருபவர்களுக்கு அநேகமாக டெங்கு தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று இரத்த பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.