காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும் விடுவிப்பையும் வலியுறுத்தி எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவிக்கையில்,
\’காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களது உற வினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக தொடர் போராட்டம் நடத்தப்படுகின்றது. அவர்களுக்கு இதுவரை எந்தவித பதிலும் உரிய தரப்புகளிடம் இருந்து வழங்கப்படவில்லை.
நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்து இன்று (நேற்று) ஞாயிற்றுக்கிழமையுடன் 63 நாட்களாகின்றன. நாங்கள் அநாதைகள் போன்று வீதியில் போராடி வருகின்றோம். எங்களை அனைவரும் கைவிட்டுள்ளனர். எமது பிரச்சினைக்குத் தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும் என்றே நாம் போராட்டத்தில் இறங்கினோம். ஆனால், எமது கோரிக்கைகளை எவரும் கண்டுகொள்ளவில்லை.
எதிர்வரும் 27ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் நடத்துவதற்கு அழைப்பு விடுகின்றோம்.வர்த்தகச் சங்கங்கள், பொது அமைப்புக்கள், போக்குவரத்துச் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள் என அனைவரும் இணைந்து எமது போராட்டத்துக்கு வலுச்சேர்த்து ஒத்துழைக்க வேண்டுகின்றோம்\’ என அவர் தெரிவித்தார்.
அதேவேளை, வவுனியாவிலும் எதிர்வரும் 27ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு வர்த்தக சங்கம், பொது அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வவுனியாவில் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற் கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவதனா தெரிவிக்கையில்,
\’எதிர்வரும் 27ஆம் திகதி கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்வர்களின் வெளிப்படுத்தலைக் கோரி போராட்டம் மேற்கொண்டு வருபவர்கள் பூரண ஹர்த்தாலை கிளிநொச்சியில் அனுஷ்டிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவிலும் கடந்த 59 நாட்களாக, காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை வெளிப்படுத்துமாறு கோரி போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம். எனவே, எமது உறவுகளைக்கண்டு பிடித்து எம்மிடம் ஒப்படைக்கும் இந்தப் போராட்டத்துக்கு வவுனியா வர்த்தக சங்கம், தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் ஆகியவை ஆதரவு வழங்கி எதிர்வரும் 27ஆம் திகதி வவுனியாவில் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்’’ என அவர் மேலும் தெரிவித்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி வட க்கில் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலையிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகி ன்றன.
நேற்று கிளிநொச்சியில் 63ஆவது நாளாகவும், வவுனியாவில் 59ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 47 ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் 40ஆவது நாளாகவும், திருகோணமலையில் 50ஆவது நாளாகவும் போராட்டங்கள் தொடர்கின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.