வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலை ஆளுநர் அலுவலக முன்றலில் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை நேற்றையதினம் சந் தித்து கலந்துரையாடியிருந்தனர். அப்போது தமது ஆதங்கத்தினை உறவினர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின்; உறவுகள் முன்னெடுத்து வரும் போராட்டத்துக்கு தமிழ் அரசியல் தலைமைகள் யாரும் இதுவரை வந்து ஆதரவு வழங்கவில்லை என தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோ ரின் உறவுகள், உண்மை நிலையை வெளிவராது தடுப்பதற்கு தான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாம் எமது உறவுகளை இழந்து அநாதையாக வாழ்கிறோம், எமது வேதனை யாருக்கும் தெரியப்போவதில்லை, குடும்பத்தில் இருவர் மூவர் என பறிகொடுத்துவிட்டு தவிக்கிறோம், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகிறோம், எமக்கு எமது உறவுகள் வேண்டும் அவர்கள் கிடைத்தால் எமது வாழ்க்கையை நாம் சிறப்புடன் வாழ்வோம்,
நாம் பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகிறோம், இங்குள்ள அரசியல் தலைமைகள் எம்மை வந்து இதுவரை பார்க்கவில்லை. சம்பந்தர் ஐயா இங்கு தான் உள்ளார் ஆனால் எம்மிடம் வந்து ஒருவார் த்தை கூட பேசவில்லை. அத்துடன் எமது போராட்டம் தொடர்பிலான செய்திகளை வெளிக்கொண்டு செல்ல வேண்டாம் எனவும் தடைசெய்து வருகிறார்கள் இது எமக்கு மிகவும் வேதனையளிக்கிறது. எம்மை தேடி வந்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடத்தில் கருத்து தெரிவிக்கையில்,
வடமாகாணம் முழுவதும் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இது நடக்க வேண்டிய அவசியமும் உள்ளது. காணாமல்போனோர் விபரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன் இது குறித்து கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதி அழைத்துள்ளார்.
ஆணைக்குழு முன் மக்கள் சாட்சியம் அளித்து அறிக்கை விரைவில் வெளியிடவேண் டும் என கேட்டுள்ளோம், அதில் அனைவரின் சாட்சியம் உள்ளது. அதிலும் மேலதிக விபரம் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும்.
பல தாய்மார்கள் தமது உறவுகளை அடையாளப்படுத்தியும் படங்கள் காட்டியுள்ளார்கள் அது தொடர்பிலும் எடுத்துக் கூறியுள்ளோம். உங்கள் போராட்டத்தை கைவிடக் கூடாது. இதே போன்று காணி, காணாமல் போனோர், சிறைக்கைதிகள் சம்பந்தமான பல நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. எனவே மக்கள் போராட்டம் எமக்கு பலமூட்டுவதாக உள்ளது.அரசுக்கு நெருக்குதல் கொடுத்தால் மட்டும் தான் முன்னேற முடியும். வேறு எந்த நடவடிக்கையும் பலிக்காது என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.