பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு மற்றும் ஒன்லிசூபுவா தமிழ்ச்சங்கமும் இணைந்து தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அம்மா அவர்களின் 29 வது ஆண்டினையும், நாட்டுப்பற்றாளர் நினைவையும் 22.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான ஓன்லிசூபுவா நகரத்தில் சிறப்பாக நினைவு கூரப்பட்டது.
தாயவள் அன்னை பூபதியம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை 12.10.1996ல் கொக்குவில் பகுதியில் வீரச்சாவைத்தழுவிக் கொண்ட கப்ரன் மணிமகனின் தாயார் அவர்கள் ஏற்றி வைக்க அவரைத் தொடர்ந்து, 31.05.2015ல் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்ட நாட்டுப்பற்றாளர் சிவராசா அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரின் துணைவியார் அவர்களும், நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயயசோதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு 01.03.2009ல் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை வினிதரனின் சகோதரரும், நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மணிமகனின் தந்தையாரும், தேசவிடுதலைப் பற்றாளராக மதிப்பளிக்கப்பட்ட பிரெஞ்சுப் பெண்மணி மடம் போலா அவர்களின் திருவுருவப்படத்திற்கு வீரவேங்கை யாழ் நம்பியின் சகோதரி அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்திருந்தனர். அவர்களின் மலர் வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்றது. நாட்டுப்பற்றாளர் நினைவுசுமந்து பொதுமக்கள் மலர் வணக்கத்தையும் சுடர்வணக்கத்தை செய்திருந்தனர்.
நினைவுரையை தமிழ்பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி. சுசிலா அவர்கள் வழங்க தாயவளே உன்னைப்போற்றுகின்றோம் பாடலுக்கு பொபினி தமிழ்ச்சோலை மாணவிகளும், செல் தமிழ்ச்சோலை மாணவிகள் புலிமா புலிமா எழுச்சிபாடலுக்கான நடனத்தையும், வானாகினாய் பாடலுக்கு செவரோன் தமிழ்ச்சோலை மாணவிகளும், போரில் சிலபேர் மாய்ந்து போகலாம், வீழமாட்டோம் வீழமாட்டோம் எழுச்சிப்பாடல்களுக்கு ஒன்லிசூபுவா தமிழ்ச்சோலை மாணவிகளும் நடனங்களை வழங்கியிருந்தனர். எழுச்சிக்கவிதையை தமிழ்ப் பெண்கள் உறுப்பினர் திருமதி. யசோதா எட்வேட் அவர்கள் வழங்க தமிழீழ தாயத்தின் இன்றைய உண்மை நிலையை உணர்த்தும் நாடகத்தினை திருமதி. யசோதா அவர்களின் நெறியாள்கையில் தமிழ்ப்பெண்கள் அமைப்பினர் மேடையேற்றியிருந்தனர். காலத்திற்கேற்ற கதையை தெரிவுசெய்து அதற்கு உயிர்கொடுத்தாற்போல் தத்ரூபமாக பத்திரங்களாய் அவர்கள் மேடையேறிய ஆற்றுகை மக்கள் கண்களில் கண்ணீரினை வரவைத்திருந்தது. தமிழ்ப்பெண்கள் அமைப்பின் உருவாக்கத்தில் உருவாகியிருந்த அங்கையற்கண்ணி இசைக்குழு மீண்டும் புதிய இளையகலைஞர்களை உள்வாங்கி எழுச்சிப்பாடல்களை வழங்கியிருந்தனர். இவர்களுக்கு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் உறுதுணையாக இருந்தமைக்கு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரின் சிறப்புரையும் இடம் பெற்றது. நிகழ்வில் ஓன்லி சூபுவா மாநகர உதவி முதல்வர் மற்றும் முக்கிய மானவர்கள் கலந்து கொண்டதோடு உதவி முதல்வர் உரையாற்றியுமிருந்தார். இலங்கை தீவிற்கு தான் 1983 இல் சென்றிருந்ததையும் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட பாகுபாடுகளும், உயிர்பறிப்புகள் பற்றி தான் அறிவேன் என்றும் புலம்பெயர்ந்து வாழ்ந்த போதும் உங்கள் மண்ணையும் மக்களையும் கலைகலாச்சாரத்தையும் மறந்து விடாது பேணிப்பாதுகாப்பதையிட்டு பெருமையும் மகிழ்சியும் அடைவதாகவும், நம்பிக்கையிழக்காது தொடர்ந்து உங்கள் பணியை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாரக கோசத்துடன் நாட்டுப்பற்றாளர் நிகழ்வு நிறைவு பெற்றது.