ஜெனிவாவில் நடைபெற இருக்கின்ற ஐநா சபையின் 28ஆவது மனிதவுரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு ‘விடுதலைச் சுடர்’ எனும் பெயரில் மனிதநேயப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா வரைக்கும் செல்லுகின்ற இப் போராட்டமானது, திட்டமிட்ட வகையில் தமிழின அழிப்பைத் செயற்படுத்திக்கொண்டு வருகின்ற சிங்களப் பேரினவாதத்தின் சுதந்திர நாளானதும் ஈழத்தமிழர்களின் கரி நாளானதுமான பெப்ரவரி 4ஆம் திகதி இலண்டனில் ஆரம்பமாக உள்ளது. இது பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாண்ட், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கூடாக 40 நாட்கள் பயணம் செய்து சுவிஸ் ஜெனிவாவை 16.03.2015 அன்று சென்றடைய உள்ளது.
ஐநா இல், மனிதவுரிமைகளுக்கான சபையில் தற்பொழுது அங்கம் வகிக்கின்ற பிரித்தானியா, பிரான்ஸ், நெதர்லாண்ட் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கூடாகச் செல்லும் இந்த மனிதநேயப் போராட்டமானது ஈழத் தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் ‘விடுதலைச் சுடர்’ இனை கையில் ஏந்தியவாறு உலக மக்களுக்கும் அரசில் பிரமுகர்களுக்கும் எமது போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் சந்திப்புக்களும் நடைபெறவுள்ளன.
பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்படுகின்ற இப்போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் தார்மீகக் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
விடுதலைச் சுடர் போராட்டத்தின் கோரிக்கைகள் பின்வருமாறு :
1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு, தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4. கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.