மணல் கொள்ளையை தடுக்கக் கோரி, காவல் நிலையத்தின்முன்னால் மறியலில் ஈடுபட்ட மக்கள் மீது வேகமாக வந்த பாரஊர்தி மோதியது 20 பேர் பலி 15 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பதியில் ஸ்ரீகாளஹஸ்தி, வேங்கடகிரி நகரங்களுக்கு இடையே உள்ளது ஏர்பேடு. இன்று (வெள்ளிக்கிழமை) மணல் கொள்ளையை தடுக்கக் கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டு வந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ரேணிகுண்டாவில் இருந்து கிருஷ்ண பட்டினம் செல்லும் பாரஊர்தி வேகமாக சென்று மறியல் செய்து கொண்டிருப்பவர்களின் கூட்டத்தில் புகுந்து, தாறுமாறாக ஓடி மின் கம்பத்தின் மீது மோதியதோடு அருகிலிருந்த கடைக்குள்ளும் புகுந்தது. இந்த விபத்தில் கடையிலிருந்தவர்களில் 6 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
கடையில் வேறு யாராவது சிக்கியிருக்கிறார்களா எனப் பார்ப்பதற்காக அருகில் நின்றிருந்த பொதுமக்கள் உதவிக்குச் சென்றபோது அறுந்துகிடந்த மின்சார கம்பி மின்சாரம் பாய்ந்ததில் மேலும் சிலர் பலியாகினர். இதுவரை 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.