யாழ். மாநகரில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை

0
688

பூமி தினமான நாளை சனிக்கிழமை (22) முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக் கவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபையினால் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாண சபை எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு அமையவும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சூழல்நேய நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கவும் இந்த நடவடிக்கையில் சகலரும் இணைந்து கொள்ளவேண்டும். நாளாந்த பாவனையின் பின்னர் கழிவாக வீசப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் ஆகியவையே பெருமளவில் திரண்டு மாநகர கழிவகற்றலில் சவால்களையும் சூழலுக்குப் பெரும் தீங்கையும் ஏற்படுத்துவனவாயுள்ளன.
குடிதண்ணீர் விற்பனையாகும் பிளாஸ்ரின் போத்தல்கள், ஒருநாள் பாவனை பிளாஸ்ரிக் குவளைகள், மதிய உணவு பொதியிடும் பொலித்தீன்கள், பொருள்கள் வாங்கும் இலகு பொலித்தீன் பைகள் போன்றவை இதில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
உணவுச்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் தங்கள் வியாபார நடவடிக்கையின்போது சாப்பாட்டுத் தட்டங்களைக் கொதிநீரில் கழுவி, சுத்தமான தட்டங்களில் வாழை இலைகளை இட்டுச் சுத்தமான கண்ணாடி அல்லது சில்வர் குவளைகளைப் பாவித்துக் குடிதண்ணீரை வழங்கலாம். உணவுப் பொதியிடுகையில் வாழை இலைகளைப் பாவித்து குளிர்களியையும் பழங்களின் கலவையையும் சுத்தமான சில்வர் ஏந்திகளில் வழங்கி இந்த முயற்சிக்கு வலுச் சேர்க்க முடியும்.
பூமி தினத்தில் தடை செய்யப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகள் தங்கள் இடங்களில் சேரும் திண்மக் கழிவுகளில் காணப்படுமாயின் யாழ்ப்பாண மாநகர பொதுச் சுகாதார பொறியியற் பிரிவினரால் குறித்த இடத்துக்கான கழிவகற்றல் சேவை நிறுத்தப்படும். இவற்றை எரிப்பதால் உண்டாகும் விளைவுகள் மனிதருக்குத் தீங்கை ஏற்படுத்தும். மாநகர எல்லையினுள் குப்பை களுக்கு எரியூட்டுதல் தவிர்க்கப்படல் வேண்டும் என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here