கோத்தபாய கடற்படை முகாமை அகற்றக்கோரி போராட்டம்..!

0
152

முல்லைத்தீவு வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதிகளை உள்ளடக்கி 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாமை அகற்றக்கோரியும் வட்டுவாகல் மற்றும் நந்திக்கடலில் மக்களின் மீன்பிடி தொழிலுக்கு இடையூறாக தடைகளை ஏற்படுத்தியுள்ள கடற்படையினரை விலககோரியும் 3நாள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை வட்டுவாகல் மக்களும், மீனவர்களும் இணைந்து கோத்தபாய கடற்படை தளத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி மற்றும் வட்டுவாகல் பகுதியை உள்ளடக்கி பொதுமக்களுக்குச் சொந்தமான 397 ஏக்கர்காணி மற்றும் அரச காணிகள் உட்பட 617 ஏக்கர் வரையான காணியை கடந்த 2009ம் ஆண்டு முதல் கடற்படையினர் ஆக்கிரமித்து பாரிய கடற்படைத்தளமொன்றை அமைத்துள்ளதுடன் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியிலும் கடற்தொழிலை மேற்கொள்வதற்கும் மீனவர்களுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அத்தோடு குறித்த மக்களின் காணிகளில் அமைந்துள்ள கடற்படைத்தளத்தினுள் மக்களுக்கு சொந்தமான கால் நடைகளையும் பிடித்து வைத்துள்ளனர்.
குறித்த காணிகளை விடுவிக்குமாறும், வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் எந்தவித தடைகளையும் ஏற்படுத்தாது தம்மை தொழில் செய்ய அனுமதிக்குமாறு கோரியும் பல தடவைகள் போராட்டங்களை இந்த மக்கள் முன்னெடுத்த போதிலும் காணிகளை கடற்படையினர் தமது தேவைக்கு சுவிகரிக்கும் விதத்தில் இரண்டு தடவைகள் அளவீடு செய்ய முற்பட்ட சமயம் பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். தற்போது கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 617 ஏக்கர் காணிகளும் மிகவும் வளம் நிறைந்த பகுதியாகவும் அதிக வருமானம் தரக்கூடிய கடற்தொழில் பகுதிகளையும் கொண்டுள்ளது. இதனை விடுவித்து தருமாறு அதன் உரிமையாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமது சொந்த நிலங்களை விடுவிப்பது தொடர்பில் கடற்படையினரிடமிருந்து எந்தவிதமான சாதகமான பதில்களும் கிடைக்காத நிலையிலும் மாறாக கடற்படையினர் குறித்த முகாமை சுற்றி நிரந்தர காவலரண்களை அமைந்து வருவதோடு பெரும் எடுப்பில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதோடு முகாமையும் விஸ்ரித்து வருகின்றனர். இதனால் விரக்தி உற்ற மக்கள் இனியும் சொந்த நிலங்களை இழந்து வாழமுடியாது என தெரிவித்து குறித்த காணி கடல் மீட்பு போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here