இந்தியா , சிம்லா பிரதேசத்தில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த கோர விபத்தில் 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 11 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஹிமாச்சல் பிரதேசத்திலிருந்து இருந்து தனியார் பேருந்து ஒன்று உத்தரகாண்ட் மாநிலம் டியுனிக்கு 56 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. சிம்லா மாவட்டம் நேர்வா என்ற இடத்தில் சென்ற போது ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த டான்ஸ் ஆற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறை மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை மற்றும் மீட்புப்படையினர் பேருந்துடன் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 45 பேரின் உடல்கள் மீட்பக்கப்பட்டுள்ளன. அவர்களின் உடல்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 11 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிமாக ஈடுபட்டுள்ளனர். பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து நீண்ட நேரமாகியுள்ளதால் அவர்களை உயிருடன் மீட்பது சிரமம் என்று மீட்ப்புப்படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.