பாராளுமன்ற எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த அதி நவீன சொகுசு பேருந்துகள் இரண்டு நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன சொகுசு பேருந்து வண்டிகளும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பிட்ட தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
வெளிவிவகார அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் கீழ் இந்த சொகுசு பேருந்து வண்டிகள் குத்தகைக்கு எடுக்கப்பட்ட போதும் இந்த பேருந்து வண்டிகள் ஒருகாலமும் அமைச்சில் நிறுத்த வைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சின் போக்குவரத்துப் பிரிவு மாதாந்தம் இரண்டு பேருந்து வண்டிகளுக்கும் 18 இலட்சம் ரூபாவை குத்தகையாக வழங்கி வருகிறது. அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் இயங்கும் வாகனங்கள் தொடர்பில் ஆராய்ந்த போதே அமைச்சில் எவரும் கண்டிராத இந்த பேருந்து வண்டிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இரண்டு சாரதிகள் இந்த பஸ் வண்டிகளை வெளிவிவகார அமைச்சு வளாகத்தில் நிறுத்திச் சென்றதாகவும் அங்கிருந்த உயரதிகாரி ஒருவர் கூறினார். பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டது முதல் இன்று வரை மாதாந்தம் 18 இலட்சம் ரூபா இதற்கு குத்தகையாக செலுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் சச்சின்வாஸ் எம்.பியின் பிரத்தியோக சாரதிகளைத் தவிர்ந்த அமைச்சிலுள்ள எந்தவொரு சாரதிக்கும் மேற்படி பேருந்து வண்டிகளை இயக்கத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.