பிரான்சில் சியான் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 21 ஆவது ஆண்டு விழா! 

0
231

பிரான்சின் சியான் மாநகரத்தில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் 1995 களில் ஆரம்பிக்கப்பட்ட பிரான்கோ தமிழ்ச்சங்கம் அதன் உப தமிழ்ச்சோலை மாணவர்களும் இணைந்து தமது 21 ஆவது ஆண்டினை கடந்த 16.04.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.00 மணிக்கு சிறப்பாக கொண்டாடினர்.
ஆரம்ப நிகழ்வாக சியான் மாநகர உதவி முதல்வர் அவர்கள் மாணவர்களால் மலர் செண்டு கொடுத்து வரவேற்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. பொதுச்சுடரினை உதவி முதல்வர் அவர்களும், தமிழ்ச்சங்க தலைவர் திரு. வ. ரமேஸ்குமார் அவர்களும், தமிழ்ச்சோலை நிர்வாகி திரு.ராமேஸ்வரன் அவர்களும் ஏற்றிவைத்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரெஞ்சு தேசியக்கீதம் இசைக்கப்பட்டு மாணவர்களால் அது பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் மாணவர்களின் ஆக்கங்கள் நடனம், கவிதை, பேச்சு, திருக்குறள் , நாடகம், கோலாட்டம், சுரத்தட்டு இசை என்ற கலைவடிவில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தின் சார்பாக திரு. ஈசன் அவர்கள் உரையாற்றியிருந்தார். தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திரு.ரூபன் அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டு உரை ஆற்றியிருந்தனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு  சான்றிதழ்களும், நினைவுச்சின்னங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன. 21ம் ஆண்டு நினைவாக தமிழ்ச்சோலை மாணவர்களின் ஆக்கங்கள் கொண்ட மலர் வெளியிடப்பட்டது.
இம்மலரினை தமிழ்ச்சோலை நிர்வாகி வெளியிட்டு வைக்க சியான் தமிழ்ச்சங்கத்தின் ஆரம்பகால உருவாக்கத்தில் ஒருவராக இருந்து இன்று வரை தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்து வரும் திரு.ருக்மாங்கன் அவர்கள் மலரினைப் பெற்றுக்கொண்டார். மலரில் மாணவர்களின் தமிழ்மீதும், தாய்மண்ணின் மீதும் உள்ள பற்றுதலை காணக்கூடயதாகவிருந்தது. அவர்கள் கலை வெளிப்பாடுகளும் அவ்வாறே அமைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. பிரான்சில்  இல்தூ பிரான்சு என்று அழைக்கப்படும் பல்வேறு மாநிலங்களில் பல்லாயிரம் தமிழ் மக்கள் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வரும் அதேவேளை வெளிமாநிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்தபோதும் தன்னுடைய மொழியையும், கலைகலாசார பண்பாடுகளோடு வாழ்ந்து வருவதும், தம்முடைய குழந்தைகளுக்கும் மற்றைய குழந்தைகளையும் தம் குழந்தைகளாக எண்ணி சேவைநோக்கத்தோடு கற்பித்துவரும் ஆசிரியர்கள் மற்றும் தேச நலன்விரும்பிகள், பெற்றோர்கள் என்றும் மதிப்புக்கும் மரியாதைக்குமுரியவர்கள். அந்த வகையில் சியான் வாழ் குழந்தைகள் தாய்மண், தாய்மொழிப்பற்றாளர்களாக வளர்ந்து வருவது மிகுந்த பாராட்டுக்கும், மகிழ்ச்சிக்குமுரியதாகும் எனப் பாராட்டப்பட்டது. கரோக்கி   மூலம் தாயகப்பாடல்களை தத்துருபமாக கலைஞர்கள் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு வர்த்தகர்கள், தேசநலன் விரும்பிகள் தமது எல்லாவிதமான உதவிகளை வழங்கியிருந்தனர். மண்டபம் நிறைந்த மக்களாக தமிழ்மணம்வீசும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதும் அதற்காக வந்து கலந்துகொண்ட அத்தனை மக்களையும் தலைவர் அவர்கள் நன்றியோடு கரம்பற்றிக் கொள்கின்றோம் என்று கூறியிருந்தார். மற்றும் தாயக பற்று உறுதிப்படலுடன், தாரக மந்திரத்துடனும் 21 ஆவது ஆண்டு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here