புல் உண்ணும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்!

0
205

டெல்லியில் இன்று (17) தமிழக விவசாயிகள் கால்நடைகள் போல் நடைபோட்டு புல் உண்ணும் போராட்டம் நடத்தினர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் நடத்தும் போராட்டம் இன்று 35-வது நாளை எட்டியுள்ளது.
டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது, அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.
வங்கிக்கடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது உட்பட பல கோரிக்கைகளாக உள்ளன. இதில், அன்றாடம் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு வகை போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தவகையில் இன்று விவசாயிகள் கால்நடைகள் போல் நடைபோட்டு புல் உண்ணும் போராட்டம் நடத்தினர்.
இது அய்யாகண்ணு கூறுகையில், “வறட்சியால் விளைநிலங்கள் வறண்டு போய், பயிர்கள் நிலத்தில் காய்ந்து பொய்த்துப் போய்விட்டன. இதனால், விவசாயிகள் உண்ண உணவின்றி கால்நடைகளை போல் புல், இலைதழைகளை உண்ணும் நிலைக்கு ஆளாகி விட்டனர். இதை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று புல் உண்ணும் போராட்டம் நடத்தி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
டெல்லியில் அடிக்கும் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு வட இந்திய மாநில விவசாய சங்கங்களும் ஆதரவளித்து சிறு, சிறு குழுக்களாக நேரில் வந்து செல்கின்றனர். டெல்லிவாழ் தமிழர்களில் பலரும் இன்று நேரில் வந்து விவசாயிகளுக்கு ஆதரவளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here