இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் மற்றும் கைதுகள், கடத்தல்கள் மூலமாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்ப ட்ட உறவுகளிற்கு ஆதரவாக, எமது அரசியல் தலைமைகளும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக கலாசார அமையத்தில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உறுப்பினர் பசுபதிபிள்ளை இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு அரசு நல்ல பதிலை வழங்க வேண்டும். இதற்காக நமது அரசியல் தலைமைகளும் வீதியில் இறங்கி மக்க ளுடன் போராட வேண்டும்.
வடக்கு-கிழக்கில் பட்டதாரிகளின் போராட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவர்களும் நீண்ட நாட்களாக உறுதியு டன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிற்கு மாகாண சபையில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் விபரம் திரட்டி ஆளுநருக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட நியமனங்களுக்கு பட்டதாரிகள் பலர் பணிக்கு செல்லவில்லை என சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறு பணிக்கு செல்லாதவர்களை தவிர்த்து, அவர்களுக்கு பதிலாக புதிய நியமனங்களை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில், ஏற்கெனவே பணியில் உள்ளவர்கள் நியமிக்கப்படக்கூடாது என்பதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என உறுப்பினர் பசுபதிப்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.