மன்னார் – முசலி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய தினம் புத்தளத்தில் வாழ்ந்துவரும் வடபுல முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முசலி மக்கள் வாழ்ந்த பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய வர்த்தமானியில் கையொப்பமிட்டதை அடுத்து, குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புத்தளம் நுரைச்சோலை கொய்யா வாடியில் வாழும் வடபுல முஸ்லிம்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழு கையின் பின்னர், கொய்யாவாடி அல் முனவ்வர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி கடந்த 18 நாட்களாக மன்னார் மரிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன.
நேற்றைய தினம் குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
புத்தளம் கொய்யாவாடி விளையாட்டுக் கழக சம்மேளனம், கொய்யாவாடி பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
‘நல்லாட்சி அரசே முசலி மக்களை மீண்டும் அகதிகளாக்க வேண்டாம்”, \’நல்லாட்சியே 2012 மற்றும் 2017 வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்து செய்”, \’நல்லாட்சி அரசே முசலி மக்களின் காணிகளை அபகரிக்காதே”,
‘நல்லாட்சிக்கு வாக்களித்த மக்களின் அடிப்படை உரிமையை மனசாட்சி இன்றி பறிக்காதே”, ‘வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்காதே” போன்ற பல வசனங்கள் எழுதப்பட்ட வாசகங்களை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.