கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் அதனை விடுவித்து சொந்த நிலத்தில் தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி 42 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமக்குரிய தீர்வை பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரண்டுவார கால அவகாசத்தை தமிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கியிருந்த நிலையில் அந்த காலப்பகுதியில் எந்த விதமான தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் மீண்டும் இன்றையதினம் தமிழ் தேசியகூடடமைப்பின் அரசியல் தலைவர்கள் அனைவரையும் கேப்பாபுலவில் தாம் போராடிவரும் இடத்துக்குவருகைதருமாறு அழைப்பு ஒன்றினை விடுத்திருந்தனர் . இன்று (11 ) கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான சிவநேசன் , ரவிகரன் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
தமிழ் தேசியகூடடமைப்பின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் இன்றையதினம் கேப்பாபுலவு மக்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தநிலையில் மூன்றுபேர் மட்டுமே வருகை தந்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஏற்கனவே பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை அழைத்து கேப்பாபுலவு கிராம விடுவிப்புதொடர்பில் விரைவில் நல்ல தீர்வை பெற்றுத்தரவேண்டும் எனக்கோரி கால அவகாசத்தை நாம் வழங்கியிருந்தோம். ஆனால் இன்றையதினம் மூன்றுபேர் மட்டுமே எம்மை சந்திக்கவருகைதந்திருக்கின்ரீர்கள். வாக்கு கேட்டு வரும்போது மட்டும் பலர் எம்மை நாடி வருகின்றீர்கள் ஆனால் எமக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒருசிலரே வருகின்றீர்கள். இன்று நாம் 42நாட்களாக இந்த வீதியில் சொந்த நிலத்தை கேட்டு போராடிவருகின்றோம் இதுவரையில் எமக்கு என்ன தீர்வு முன்வைக்கப்பட்டது.
எம்மை ஆள்வதற்கான அதிகாரத்தினை வழங்கி எமக்காக குரல்கொடுக்கக்கூடியவர்கள் என நாம் தமிழ்த்தேசிய கூட்ட்டமைப்பினருக்கு வாக்களித்து விட்டு அவர்களை நம்பி இருக்கின்றோம் . ஆனால் இதுவரையில் அந்த கட்சியின் தலைவரும் இந்த நாட்டின் பலம்பொருந்திய முக்கிய அரசியல் பதவியான எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்கும் சம்பந்தன் ஐயா எம்மை ஏன் என்றுகூட திரும்பி பார்க்கவில்லை. நாம் விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றோம்.எமக்கு விரைவில் எமது நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.அதற்காக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட அனைத்து பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பிகர்களும் உரிய கருமங்களை விரைந்து ஆற்றவேண்டும். அவ்வாறு எமக்கான தீர்வை பெற்றுத்தர முடியாவிட்டால்.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களும் தங்களின் பதவிகளை துறந்துவிட்டு தம்மோடு வீதியில் இருந்து போராட வருமாறும் கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.