மண்சோறு சாப்பிடும் நிலைக்கு மோடி அரசு தள்ளிவிட்டது !

0
156

டெல்லியில் கடந்த 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள், தங்களது நூதனப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை மண்சோறு சாப்பிட்டனர்.
நேற்று திங்கட்கிழமை, இந்திய பிரதமர் அலுவலகத்தில் மனுக்கொடுப்பதற்காக, காவல் துறையினர் அவர்களை அழைத்துச் சென்றனர். வெளியே வந்ததும், வாகனத்திலிருந்து குதித்த சில விவசாயிகள் தங்கள் ஆடைகளக் களைந்து நடுரோட்டில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல தொடர்ந்து அவர்கள் நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை, தாங்கள் போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தர் பகுதியில், சாலையின் நடுவே சாப்பாட்டைக் கொட்டி, அதில் சாம்பாறு ஊற்றி வரிசையாக அமர்ந்து விவசாயிகள் சாப்பிட்டனர்.
தங்களை மண்சோறு சாப்பிடும் நிலைக்கு மோடி அரசு தள்ளிவிட்டதாக அவர்கள் கோஷமிட்டனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி , தங்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்க வேண்டும், அவற்றை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.
விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தென்னக நதிகளை இணைக்க வேண்டும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கடந்த 29 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here