வடமாகாணம் இராணுவ பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்.அதற்கேதுவாக படையினரது எண்ணிக்கை நாட்டின் அனைத்து பகுதிகளிற்கும் பரவலாக்கப்படவேண்டுமென யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்துக்கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யுகோ ஸ்வைர்க் நேற்றுக் காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களிடையே விபரித்த அவர்,
புதிய அரசின் செயற்பாடுகள் பல இடங்களில் நன்மை பயக்கின்றது. குறிப்பாக ஆளுநர், பிரதம செயலாளர் ஆகியவர்களின் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் பாரிய பிரச்சினைகளான இராணுவ வெளியேற்றம், சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீளக்கையளித்தல் தொடர்பான பாரிய மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதுமட்டுமின்றி பொதுமக்களின் காணிகளையா? இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.
அது தொடர்பாக அவருக்கு முழுமையாக எடுத்துக் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்ப்பாக விரிவாக எடுத்துக் காட்டப்பட்டது.இது பாரிய மாற்றதை ஏற்படுத்துமா? என்பது அவர்களது அடுத்த வினாவாக இருந்தது. 99 சதவீதமான தமிழ் பேசும் மக்கள் வடமாகாணத்தில் உள்ளனர். விகிதாசார அடிப்படையில் பாராளுமன்றத்துக்கு சிங்கள பிரதி நிதியை அனுப்பும் சூழ்நிலை உருவாகும் என்பதை அவர்களுக்கு தெரிவித்தேன்.
இதன் பின்னரே இதில் இவ்வளவு சிக்கலான பிரச்சினை உள்ளது என்பதை புரிந்து கொண்டேன் என்று அவர் கூறினார் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் யாழ்.ஊடக அமைய பிரதிநிதிகளை சந்தித்த வேளை, இலங்கையின் தெற்கினை போன்று வட, -கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான நெருக்குவாரங்கள் குறைந்திருப்பதாக இல்லை. அத்துடன் கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய தமிழ் ஊடகவியலாளர்கள் இலங்கை திரும்புவதற்கான சூழல் மேம்பட்டுவிட்டதாக நம்பவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
புதிய ஆட்சி மாற்றம் மற்றும் ஊடக நிலை என்பவை பற்றி அவர் ஊடக அமையப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடிகள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட வட,கிழக்கை சேர்ந்த ஊடகவியலாளர்கள் தொடர்பிலான விசாரணைகள் உள்ளிட்ட பலவற்றினை பற்றி ஊடக அமையப் பிரதிநிதிகள் விபரித்திருந்தனர்.
முன்னதாக யாழ்.பொது நூலகத்திற்கான ஒரு தொகுதி நூல்களை அவர் பிரதம நூலகரிடம் கையளித்திருந்தார். நேற்று காலை 9.30 மணிக்கு வடக்கு முதல்வரைச் சந்தித்து கலந்துரையாடல்களை அவர் நடத்தியிருந்தார்.