‘மஹிந்த அரசில் காணாமல் போனவர்களை மைத்திரி அரசில் தேடி தா” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் காணாமல் போனவர்களின் உறவினர்களால் இன்று காலை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1982 முதல் 2009 வரையான காலப்பகுதியில் காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரியே இன்று காலை மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பூங்காவில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் போனோரின் உறிவுகளின் குடும்பங்களுடன் மட்டக்களப்பு காந்திசேவா சங்கமும் இணைந்து இந்த ஆர்;ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் கூட்டமைப்;பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
‘காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணையை அரசே துரிதப்படுத்து, கணவரைத் தேடி தா, எனது பிள்ளையை கண்டுப்பிடித்து தா, என பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கான மகஜர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டன.