கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா இராணுவத்தினர் அதனை விடுவித்து சொந்த நிலத்தில் தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி 41 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு சிறீலங்கா இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்தவாரம் மீள்குடியேற்ற அமைச்சரால் கேப்பாபுலவு மக்களின் காணிகள் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் கேப்பாபுலவு பூரர்வீக கிராம மக்களின் போராடடம் தொடர்கின்றது.
இவ்வாறும் பல போராட்டங்களை கடந்த காலங்களில் தாம் மேற்கொண்டிருந்த போதிலும் அந்த நேரங்களில் பலரால் இவ்வாறான வாக்குறுதிகள் பல வழங்கப்பட்டும் கடைசிவரை எந்த தீர்வும் தமக்கு வழங்கப்படாமல் தாம் ஏமாற்றபட்ட்தாகவும் இனியும் அவ்வாறானதொரு நிலையை தாம் விரும்பவில்லை எனவும் தற்போது அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதியானது நிறைவேற்றபட்டு தாம் சொந்த மண்ணில் கால்பதிக்கும்வரை தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், தமிழர் பிரதி நிதிகளாக தம்மை காட்டி கொள்வோர் தமது போராட்டத்திற்கு ஆதரவு தராமல் இருப்பது தமக்கு பெரும் ஏமாறம் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.