சிறிலங்கா படைகளாலும் படையினருடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்டுக் காணாமல் போனோரைக் கண்டுபிடித்து தருமாறு கோரி கிளிநொச்சியில் எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட காணாமற்போனோரைக் கண்டறியும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இடம்பெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தின் நிறைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகஜர் ஒன்றும் அனுப்பப்படவுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பாக மேற்படி அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கடந்த காலத்தில் அராஜக அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுக்குக் குழுக்களின் கடத்தல்களால் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயிருக்கின்றனர்.
முள்ளிவாய்க்காலில் வகைதொகையற்ற மானுடக்கொலைகள் நடைபெற்ற போரின் போதும் அதன் பின்பும் தமிழ் இளைஞர் யுவதிகளை இழந்தவர்களின் பெற்றோர்களும் மனைவி மற்றும் உறவுகளும் இன்றுவரை கண்ணீருடன் ஏக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந் நிலையில் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றமும் அந்த ஆட்சியாளர்களின் நூறு நாள் வேலைதிட்டமும் தமிழ் மக்களின் வாழ்வில் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டுவருமென ஒட்டுமொத்த தமிழினம் எதிர்பார்க்கும் நிலையிலையே இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல்வாதிகள் மற்றும்; சமுகத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், புத்திஜீவிகள், பொதுசன அபிமானமுள்ள சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்களென அனைவரும் காணாமல் போன உறவுகளை மீட்டுத்தரக்கோரியும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் திரண்டு குரல் கொடுக்கவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட காணாமல் போன உறவுகளின் அமைப்பு மிக நேசமுடன் எதிர்பார்த்து நிற்கின்றது.
மாவட்டம் தோறும் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் இதன் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெறும் என்றும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.