மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.370 விபத்துக்குள்ளாகி அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று மலேசிய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 ராடாரில் இருந்து மாயமானது.
பின்னர் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தது. இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. இருப்பினும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இதனால் விமானம் எங்கோ உள்ளது என்றும், அதில் பயணம் செய்தவர்கள் உயிருடன் இருப்பதாகவும் பயணிகளின் உறவினர்கள் நம்பி வந்தனர்.
விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். சீன பயணிகளின் உறவினர்கள் ஏதாவது அதிசயம் நடந்துவிடாதா என்ற நினைப்பில் தான் தினமும் காலை எழுந்திருக்கிறார்கள். இந்நிலையில் மலேசிய சிவில் விமான போக்குவரத்து தலைவர் அசாருத்தீன் அப்துல் ரஹ்மான் தொலைக்காட்சியில் தோன்றி கூறுகையில், மலேசிய விமானம் எம்.ஹெச். 370 விபத்துக்குள்ளானது என்பதையும், அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டனர் என்பதையும் மலேசிய ஆளுநர் சார்பில் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம் என்றார்.